பாதுகாப்பு செயலாளர் ‘செரிக்’ நிலையத்தின் தேவைகளை கேட்டறிந்தார்
டிசம்பர் 15, 2022பாதுகாப்பு செயலாளர் கமல் குணரத்ன இன்று (12) கொழும்பு மெனிங் டவுன் மாதா வீதியில் அமைந்துள்ள செனெஹச கல்வி வள ஆராய்ச்சி மற்றும் தகவல் நிலையத்திற்கு (SERRIC) விஜயமொன்றை மேற்கொண்டார்.
செரிக் (SERIC) பாதுகாப்பு அமைச்சின் கீழ் நிறுவப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது முப்படைகள், பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தின் குடும்பங்களின் விசேட தேவையுடைய குழந்தைகளின் தேவைகள் மற்றும் அவர்களுக்கான உதவிகளை வழங்கும் முக்கிய நோக்கத்துடன் நிறுவப்பட்டுள்ளது.
இந்த விஜயத்தின் போது, ஜெனரல் குணரத்ன தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், இந்த நிலையத்தின் முன்னேற்றம், தற்போதைய நடவடிக்கைகள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.
இதன்போது, செனெஹச நிலையத்தின் மேற்பார்வை அதிகாரி சோனியா கோட்டேகொட மற்றும் கட்டளைத் தளபதி பிரிகேடியர் டி.கே.அலுதெனிய ஆகியோர் இச்சந்திப்பில் நிலையத்தின் அபிவிருத்தி தொடர்பில் விளக்கம் அளித்தனர்.
பாதுகாப்பு செயலாளரின் இந்த விஜயத்தின் போது, இங்கு கல்விகற்கும் சிறுவர்களின் நடன நிகழ்ச்சி ஒன்றும் இடம்பெற்றது. செனெஹச நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளுக்கு பரிசில்களும் வழங்கப்பட்டன.
செனெஹச நிலையத்தில் விசேட தேவையுடைய குழந்தைகளை சிறந்த முறையில் பராமரித்து அவர்களின் தேவைகள் நிறைவேற்றப்படும் அதேவேளை இது குழந்தை மேம்பாடு பற்றிய கற்றல் மற்றும் அறிவைப் பெறுவதற்கான ஒரு தகவல் நிலையமும் ஆகும்.
அத்தகைய குழந்தைகளின் உள்ளார்ந்த திறன்கள், பலம் மற்றும் பலவீனங்களை கண்டறிதல், மதிப்பீடு செய்தல், மருத்துவ உதவி, பெற்றோரின் வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனை வழங்குதல், தனிநபருக்கே உரித்தான முன்தொழில் பயிற்சியுடன் குழந்தைகளின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சியை ஊக்குவித்தல் ஆகியவை இந்த நிலையத்தின் நோக்கங்கள் சிலவாகும்.
இந்த விஜயத்தின் போது பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி சித்ராணி குணரத்ன, இராணுவ சேவா வனிதா பிரிவின் தலைவி ஜானகி லியனகே மற்றும் இலங்கை விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி சர்மினி பத்திரன ஆகியோரும் கலந்துகொண்டனர்.