கொமாண்டோ படைப்பிரிவின் புதிய தலைமையக கட்டிடம்
பாதுகாப்பு செயலாளரால் திறந்து வைக்கப்பட்டது

டிசம்பர் 19, 2022

இலங்கை இராணுவ கொமாண்டோ படைப்பிரிவின் புதிய தலைமையக கட்டிடம் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவினால் இன்று (டிசம்பர் 19) கணேமுல்லையில் உள்ள கொமாண்டோ படைப்பிரிவின் தலைமையகத்தில் திறந்து வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள வருகைதந்த ஜெனரல் குணரத்னவை கொமாண்டோ படைப்பிரிவின் கேர்ணல் மேஜர் ஜெனரல் கிரிஷாந்த ஞானரத்ன மற்றும் தலைமையக கட்டளைத் தளபதி பிரிகேடியர் கமல் தர்மவர்தன போதிமலுவ ஆகியோர் வரவேற்றனர்.

கலாச்சார பாரம்பரிய முறைப்படி பிரதம அதிதி வரவேற்கப்பட்டு புதிய கட்டிடத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

மகா சங்கத்தினரின் பிரித் பாரயண ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் ஜெனரல் குணரத்ன புதிய கட்டிடத்தை திறந்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து பாதுகாப்பு செயலாளர் புதிய கட்டிடத்தின் வசதிகளை பார்வையிட்டதுடன் தனது விஜயத்தைக் குறிக்கும் வகையில் கொமாண்டோ படைப்பிரிவின் தலைமையக வளாகத்தில் மரக்கன்று ஒன்றையும் நட்டார்.

இந்த நிகழ்வின் போது பாதுகாப்பு செயலாளர் மற்றும் படைப்பிரிவின் கேர்ணல் ஆகியோருக்கு இடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, இராணுவத்தின் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய, சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பெருந்தொகையான இராணுவ அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.