--> -->

2004 சுனாமியினால் உயிரிழந்தவர்கள் நினைவு கூறப்பட்டனர்

டிசம்பர் 26, 2022
  • பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மலரஞ்சலி செலுத்தினார்

2004 ஆம் ஆண்டு 35,000 க்கும் அதிகமான மக்களின் உயிரைக் காவுக்கொண்ட அதிர்ச்சியூட்டும் சுனாமி பேரலையின் 18 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், 'தேசிய பாதுகாப்பு நாள்' நிகழ்வு இன்று (டிசம்பர் 26) காலை 8.45 மணியளவில் காலி தெல்வத்தையிலுள்ள பெரலிய சுனாமி நினைவிடத்தில் நடைபெற்றது.

அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஏற்பாடு செய்திருந்த இந்த நினைவு நாள் நிகழ்வில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் மற்றும் தென் மாகாண ஆளுநர் கௌரவ கலாநிதி விலி கமகே ஆகியோர் கலந்துகொண்டனர்.

இதன்போது, 2004 சுனாமியினால் உயிரிழந்தவர்களின் நினைவாக காலை 9.25 மணி முதல் 9.27 மணி வரை இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

மேலும், அனர்த்தத்தில் உயிரிழந்த அனைத்து உள்நாட்டு மற்றும் வெளிநாட்டினரை நினைவுகூரும் வகையில் சர்வமத வழிபாடுகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வில், தென் மாகாண ஆளுநர், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், சிறப்பு அழைப்பாளர்கள் மற்றும் உயிரிழந்தவர்களின் உறவினர்கள் சுனாமியால் உயிரிழந்தவர்களின் நினைவாக கல்லறையில் மலரஞ்சலி செலுத்தினர்.

இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இப் பிரதேசத்தை சேர்ந்த 500 மாணவர்களுக்கு பாடசாலை கற்றல் உபகரணங்கள் அடங்கிய பொதிகள் விநியோகிக்கப்பட்டன.

சுனாமி பேரலையின் 18வது ஆண்டு நினைவு தினத்தை மாவட்ட மட்டத்தில் இன்று ஒரே நேரத்தில் அனுஷ்டிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க தெரிவித்தார்.

சுமார் 1500 பயணிகளுடன் கரையோரப் புகையிரதப் பாதையில் பயணித்த தெற்கு நோக்கிச் செல்லும் ‘சமுத்ரா தேவி’ புகையிரதம், ஹிக்கடுவ, பெரலிய பகுதிக்கு அருகில் பேரலைகள் தாக்கியதில் அதில் பயணித்த பயணிகள் சுனாமி பேரலையின் காரணமாக உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம், அரச அதிகாரிகள் மற்றும் மாவட்ட செயலக அதிகாரிகள், முப்படை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மற்றும் பிரதேசவாசிகள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.