தீவிரவாதிகளின் பயிற்சி முகாம்கள் முற்றுகை
மே 08, 2019வாளைச்சேனை பொலிஸ் பிரிவின் ரிதிதென்ன பகுதியில் தீவிரவாத குழுவினரால் அவர்களின் பயிற்சி நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்பட்டுவந்த 25 ஏக்கர் காணி பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர், பொலிஸ் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் ஆகியோரினால் திங்கட்கிழமையன்று (மே, 06) சோதனை இடப்பட்டுள்ளது.
குண்டு வெடிப்பு சம்பவத்தின் பின்னர் ஏப்ரல் 23ஆம் திகதி குறித்த காணி உரிமையாளர் வாளைச்சேனை பொலிஸாரினால் கைதுசெய்யப்பட்டு மேலதிக விசாரணைக்காக பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சந்தேக நபரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் பின்னர் குறித்த காணியில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கைகளின்போது, 231 ஜெலிக்னைட் குச்சிகள், மோட்டார் சைக்கிள் ஒன்று மற்றும் பல பொருட்களும் கைப்பற்றப்பட்டதாக நேற்று மாலை (மே, 07) கொள்ளுப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர அவர்கள் தெரிவித்துள்ளார்.
நுவரெலியாவின் பிளக்பூல் பகுதியிலுள்ள ஒரு விருந்தினர் விடுதியொன்றினை இராணுவம் மற்றும் பொலிஸார் இணைந்து திங்கட்கிழமை (மே, 06) சோதனைக்கு உட்படுத்தினர்.
நீர்கொழும்பு லாசரஸ் மாவத்தையில் 08 தொடர்பாடல் சமிக்ஞ்கை கருவிகளுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டு பொலிஸாரினால் மேலதிக விசாரைகளை முன்னெடுக்கப்படுவதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
தமது பைகள், பயணப்பை ஆகியவற்றில் அதிக கவனம் செலுத்துமாறு பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொள்வதுடன், கைவிடப்பட்ட பொதிகள் மக்கள் மத்தியில் தேவையற்ற பீதியை ஏற்படுத்தி பாதுகாப்புப் படையினரை தவறாகவும் வழிநடத்தும் எனவும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையின் ஆலோசனைக்கமைய, ஏப்ரல் 21 ம் திகதி இடம்பெற்ற குண்டு வெடிப்பின் பின்னர் இலங்கை வான்பரப்பில் ட்ரோன் கெமரா மற்றும் ஆளில்லாத விமானங்களை இயக்குதல் போன்ற நடவடிக்கைகளை தடை செய்து சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபையின் பணிப்பாளரினால் பிரகடனம் ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இத்தடைவிதிப்பானது மறு அறிவித்தல் வரும் வரை அமுலிலிருக்கும். இவ்வாறான ட்ரோன் கெமரா மற்றும் ஆளில்லாத விமானங்கள் வான்வழியில் இயக்கும் நடவடிக்கைகளானது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு ஒரு அச்சுறுத்தலாக கருதப்படும். இலங்கை வான்பரப்பில் இவ்வாறான விமானங்கள் செயற்படுவதை அவானித்தால் உடனடியாக செயற்படும் வண்ணம் நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து விமான படை வலயமைப்புக்களுக்கும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் இந்நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் அத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபடும் நபார்கள் அடையாளம் காணப்பட்டால் அவர்களுக்கு சட்டத்தின் அதிகபட்ச தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என நேற்று மாலை (மே, 07) கொள்ளுப்பிட்டியவில் இடம்பெற்ற ஊடக கலந்துரையாடலின் போது விமானப்படை ஊடக பேச்சாளர் குரூப் கேப்டன் கிஹான் செனவிரத்ன அவர்கள் தெரிவித்துள்ளார்.