இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த பெண் கிரிக்கட் வீராங்கனைக்கு புதிய வீடு நிர்மாணிப்பு

ஜனவரி 11, 2023

அண்மையில் தேசிய மட்டத்தில் சாதனைகளை புரிந்து 19 வயதுக்குட்பட்ட பெண்கள் தேசிய கிரிக்கெட் அணியில் அங்கம் வகிக்கும் யாழ்ப்பாணம் சுள்ளிபுரத்திலுள்ள விக்டோரியா கல்லூரியைச் சேர்ந்த செல்வராசா கிரிஸ்டிகாவுக்கு இராணுவத்தினரால் புதிய வீடொன்று நிர்மாணிக்கப்பட்டு கையளிக்கப்பட்டது.

தியாஹி அறக்கட்டளை மற்றும் சுள்ளிபுரம் கோவிலின் உறுப்பினர்கள் ஆகியோரின் அனுசரணையுடன் இராணுவம் இந்த வீட்டை நிர்மாணித்துள்ளது.

இந்த திட்டத்திற்கான நிதியுதவியை தியாஹி அறக்கட்டளையின் ஸ்தாபக தலைவர் திரு வாமதேவ தியாகேந்திரன் அவர்கள் வழங்கியதுடன், சுள்ளிபுரம் கோவிலில் உள்ள உறுப்பினர்கள் வீட்டைக் நிர்மாணிப்பதற்கான நிலத்தை நன்கொடையாக வழங்கியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவித்தன.

யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 51வது படைப்பிரிவின் 513வது காலாட்படைப் படையணி மற்றும் 16வது கெமுனு ஹேவா படையணியின் சிப்பாய்களின் தொழில்நுட்ப மற்றும் பொறியியல் நிபுணத்துவம் மற்றும் அவர்களது மனிதவளத்துடன் இந்த வீட்டின் நிர்மாணப்பணிகள் நிறைவு செய்யப்பட்டதாக இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதிதாக நிர்மாணிக்கப்பட்ட வீட்டின் சாவிகள் கையளிக்கும் நிகழ்வில் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் சுவர்ண போதோட்ட அவர்கள் பிரதம அதிதியாக கலந்துகொண்டு செல்வராசா கிரிஸ்டிகா மற்றும் அவரது குடும்பத்தினரிடம் வீட்டிற்கான சாவியை வழங்கி வைத்தார்.

இந் நிகழ்வில், இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், இராணுவச் சிப்பாய்கள், அனுசரணையாளர்கள் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.