நாங்கள் முழு உலகத்திற்கும் நண்பர்கள் யாருடைய எதிரிகளும் அல்ல
- பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
ஜனவரி 13, 2023
• கேர்ணல் நளின் ஹேரத் அவர்களின் புத்தக வெளியீட்டு விழாவில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்புச் செயலாளர் ஆகியோர் கலந்து சிறப்பித்தனர்.
உலகளாவிய புவிசார் அரசியல் நலன்களின் சமீபத்திய முன்னேற்றங்களை எதிர்கொள்ளும் வகையில் ஒரு தீவு தேசமாக நமது நோக்கங்களை மறுவரையறை செய்வது இன்றியமையாதது.
புத்தக வெளியீட்டு விழாவில் கலந்துகொண்ட பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் பிரமுகர்கள் மத்தியில் வியாழக்கிழமை (ஜனவரி 12) உரையாற்றுகையில்" நாங்கள் முழு உலகத்திற்கும் நண்பர்கள் யாருடைய எதிரிகளும் அல்ல என்ற ஒரு முக்கிய உண்மையை நாம் புரிந்து கொள்ள வேண்டும்" எனத் தெரிவித்தார்.
வியட்நாம் மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளை உதாரணங்களாக எடுத்துக்காட்டிய இராஜாங்க அமைச்சர் முன்பு யுத்தத்தில் ஈடுபட்டிருந்த இவ் இரண்டு நாடுகளும் இன்று பெரும் வர்த்தக பங்காளிகளாக உள்ளனர். மேலும், நாங்கள் பல படிப்பினைகளைத் தவறவிட்டு உள்ளோம் எனவும் இங்கு சுட்டிக்காட்டினார்.
பல நாடுகள் பொருளாதார, சமூக மற்றும் அரசியல் அபிவிருத்திக்கான உத்திகளை கையாண்டுள்ளதுடன், கடந்தகால செயற்பாடுகள் எதிர்கால நடவடிக்கைகளில் தாக்கம் செலுத்துவதை புத்திசாலித்தனமாக தடுத்துள்ளனர் என கொழும்பு முகத்துவாரத்தில் உள்ள ரொக் ஹவுஸ் இராணுவ முகாமில் இடம்பெற்ற புத்தக வெளியீட்டு விழாவில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.
கேர்ணல் நளின் ஹேரத் அவர்கள் எழுதிய “ஸ்டோரி ஒப் த வேர்ல்ட்’’ (STORY OF THE WORLD: Geopolitical Alliances and Rivalries Set in Stone) என்ற தொனிப்பொருளிலான நூல் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன முன்னிலையில் வெளியிடப்பட்டது.
இந்நிகழ்வில், கௌரவ விருந்தினராகக் கலந்துகொண்ட பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன உரையாற்றுகையில், புவிசார் அரசியல் அரங்கில் இத்தகைய கூட்டணிகள் மற்றும் மோதல்களுக்கு அடித்தளமாக ஒரு நாட்டின் தலைவிதி தீர்மானிக்கப்படும் என்பதால், புவிசார் அரசியல் பற்றிய விவாதமும் ஆய்வும் உலகெங்கிலும் உள்ள அறிஞர்களால் மிக முக்கியமானதாக அடையாளம் காணப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
இதன்போது, நூலாசிரியரின் முயற்சியைப் பாராட்டிய ஜெனரல் குணரத்ன, இத்துறையில் விரிவான ஆய்வின் பலனாக கேர்ணல் ஹேரத் அவர்கள் இந்தப் புத்தகத்தை வெளியிடுவது பாராட்டுக்குரியது எனவும் இத்துறையில் அவர் பெற்ற அறிவை முன்மாதிரியான முறையில் பயன்படுத்தி உள்ளார் எனவும் குறிப்பிட்டார்.
இந்த நிகழ்வின் போது, கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் மூலோபாயக் கற்கைகள் பிரிவின் தலைவரும் சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஹரிந்த விதானகே அவர்கள் தலைமை உரையை நிகழ்த்தினார். மேலும் பிரிகேடியர் (ஓய்வு) ஸ்ரீ முதன்நாயக்க அவர்கள் நிகழ்வின் போது சிறப்பு விருந்தினரின் உரையை நிகழ்த்தினார்.
இன் நிகழ்வில், கேர்ணல் ஹேரத் அவர்கள் தனது புதிய புத்தகத்தின் பிரதிகளை சிறப்பு விருந்தினர்களுக்கு வழங்கிவைத்தார்.
பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, ஜனாதிபதி ஊடகப் பிரிவின் பணிப்பாளர் நாயகம் தனுஷ்க ராமநாயக்க, சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ரஞ்சன் லமாஹேவகே (ஓய்வு), பாதுகாப்பு அமைச்சின் அதிகாரிகள், சிரேஷ்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள், பல்கலைக்கழகங்களின் தலைவர்கள் மற்றும் விரிவுரையாளர்கள், புத்திஜீவிகள், ஊடகவியலாளர்கள் மற்றும் கௌரவ அதிதிகள் பலர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.
கேர்ணல் ஹேரத் அவர்களின் இந்த சமீபத்திய வெளியீடானது, அவரின் முந்தைய பதிப்பான, புவிசார் அரசியல், வரலாறு, கலாச்சாரம், சர்வதேச உறவுகள் போன்றவற்றில் உள்ள உண்மைத் தன்மைகளை உள்ளடக்கி வெளியிடப்பட்ட 'குளோப் இன் எ நட்ஷெல்' (Globe in a Nutshell) என்ற நூலின் தொடர்ச்சியாகும்.
இப் புத்தகம், புதிய உலக ஒழுங்கின் பின்னணியில் பூகோள அரசியலில் சமகால முன்னேற்றங்களின் ஆழமான பகுப்பாய்வாக அமைந்துள்ளது.