அமெரிக்க கடற்படையின் ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலைப் பார்வையிட
பாதுகாப்பு செயலாளர் விஜயம்

ஜனவரி 20, 2023

கொழும்பு துறைமுகத்திற்கு வந்தடைந்துள்ள அமெரிக்க கடற்படைக்குச் சொந்தமான ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ கப்பலை பார்வையிடுவதற்காக பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்கள் இன்று (ஜனவரி 20) விஜயம் செய்தார்.

குறித்த கப்பலுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை கப்பலின் கட்டளைத்தளபதி கெப்டன் கீலர், டி.ஜே அவர்கள் வரவேற்றதுடன் இக்கப்பலைப் பார்வையிடுவதற்கு அழைத்துச் சென்றார்.

தேசிய மாணவர் படையணியை பிரதிநிதித்துவப்படுத்தும் மாணவச் சிப்பாய்கள் ஒரு குழுவினரும் இக்கப்பலைப் பார்வையிட விஜயம் செய்திருந்தனர்.

இக்கப்பலானது "நீர்வழி தயார் நிலை, ஒத்துழைப்பு மற்றும் பயிற்சி- 2023 (CARAT–2023)" கூட்டுப் பயிற்சி நடைவடிக்கைகளில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை (ஜனவரி 19) அன்று இலங்கையை வந்தடைந்தது.

இதேவேளை, இந்த கப்பலானது எதிர்வரும் 27ஆம் திகதி நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னதாக, இலங்கை கடற்படை கப்பல்களான “கஜபாகு” மற்றும் “சமுதுர”வுடன் இணைந்து கடற்படை கூட்டுப் பயிற்சி நடைவடிக்கைகளில் பங்குபற்றும்.

இந்த விஜயத்தின் போது, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, அமெரிக்கத் தூதரகத்தின் பிரதித் தூதுவர் டக்ளஸ் சோனெக், மேற்கு கடற்படைத் தளபதி ரியர் அட்மிரல் சுரேஷ் டி சில்வா, பாதுகாப்பு அமைச்சின் இராணுவத் தொடர்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேகா, அமெரிக்க பாதுகாப்பு ஆலோசகர் செத் நெவின்ஸ், இலங்கை கடற்படை அதிகாரிகள், அமெரிக்க தூதரக அதிகாரிகள் மற்றும் ‘யுஎஸ்எஸ் எங்கொரேஜ்’ குழுவினர் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Tamil