இரத்தினபுரியில் 'அபி வெனுவென் அபி' திட்டத்தின் நிதி உதவியுடன் கட்டிமுடிக்கப்பட்ட வீடு யுத்தவீரர் குடும்பத்திற்கு கையளிப்பு
ஜனவரி 21, 2023பாதுகாப்பு அமைச்சின் ‘அபி வெனுவென் அபி’ நிதியத்தின் நிதியுதவியுடன் நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை கையளிக்கும் நிகழ்வு ஜனவரி 21ஆம் திகதி இரத்தினபுரி அலுபொல, வேவல்வத்தையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து சிறப்பித்தார்.
தாய்நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த லான்ஸ் கோப்ரல் டபிள்யூ தர்மரத்னவின் குடும்பத்திற்கு 'அபி வெனுவென் அபி' நிதியத்தின் நிதியுதவி மற்றும் இலங்கை இராணுவத்தின் 4வது பொறியியலாளர் சேவை படைப்பிரிவினரின் மனிதவள உதவியுடன் இந்த வீடு நிர்மாணிக்கப்பட்டது.
மகாசங்கத்தினரின் மத அனுஷ்டானங்களுக்கு மத்தியில் இந்த வீட்டின் சாவி பாதுகாப்பு செயலாளர் அவர்களினால் லான்ஸ் கோப்ரல் தர்மரத்னவின் மனைவி திருமதி ஏ பி சமிலா மற்றும் மகன் திமிர நிமேஷ் தலுவத்த ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
2001ஆம் ஆண்டு வவுனியா கோவில் புளியங்குளத்தில் இடம்பெற்ற பயங்கரவாதத் தாக்குதலின் போது 6வது இலங்கை தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் தர்மரத்ன உயிரிழந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
‘அபி வெனுவென் அபி’ நிதியத்தின் உதவியினால் இந்த யுத்தவீரர் குடும்பத்தின் பகுதி அளவில் நிர்மாணிக்கப்பட்டிருந்த வீடு முழுமையாக நிறைவு செய்யப்பட்டது.
மேலும், ‘அபி வெனுவென் அபி’ நிதியத்தின் மூலம், முப்படை உறுப்பினர்கள் மற்றும் குடும்பங்களுக்கு அவர்களின் வீடுகளை நிர்மாணிப்பதற்கு அல்லது பகுதியளவு கட்டப்பட்ட வீடுகளை முழுமையாக கட்டி முடிக்க முழு மற்றும் பகுதி அளவிலான மானியங்கள் வழங்கப்படுகின்றன.
மகாசங்கத்தினர், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்- நிர்வாகம் திரு. காமினி மஹகமகே, இராணுவத்தின் பிரதித் தலைமை அதிகாரி மேஜர் ஜெனரல் செனரத் யாப்பா, பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார, இராணுவத்தின் கெமுனு படைப்பிரிவு மற்றும் இலங்கை தேசிய காவல் படையணியின் நிலைய கட்டளைத் தளபதிகள், பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் - நிர்வாகம், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் பயனாளியின் குடும்ப உறுப்பினர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.