வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 21,257 ஆக உயர்வு

டிசம்பர் 09, 2020

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான மேலும் 798 பேர் புதிதாக அடையாளம் காணப்பட்டதை அடுத்து நாட்டின் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 29,377 ஆக அதிகரித்துள்ளதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

நேற்றைய  தினம் அடையாளம் காணப்பட்டவர்களில் வெளிநாட்டிலிருந்து வருகை தந்த இலங்கையர் ஒருவரும் கொழும்பு மாவட்டத்தை சேர்ந்த 204 பேரும், கம்பஹா மாவட்டத்தை சேர்ந்த 111 பேரும் கண்டி மாவட்டத்தைச் சேர்ந்த 170 பேரும் அடங்குவதாக கொவிட்-19 பரவல் தடுப்பு செயற்பாட்டு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

மினுவாங்கொடை மற்றும் பேலியகொடை கொத்தணியில் வைரஸ் தோற்றுக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 25,818 ஆக அதிகரித்துள்ள அதேவேளை, 17,850  பேர் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர்.
நாட்டில் 11,182 பீசீஆர் பரிசோதனைகள் நேற்றைய தினம் மேற்கொள்ளபட்டதாகவும் கடந்த 24 மணித்தியாலங்களில் சுமார் 454 பேர் குணமடைந்து வைத்தியசாலையில் இருந்து வீடு திரும்பியுள்ளதாகவும் கொவிட்-19 பரவல் தடுப்பு மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.

இதேவேளை, 289 இலங்கையர்கள் இன்று காலை நாடு திரும்பியுள்ளனர். மேலும் 269 இலங்கையர்கள் இன்று நாடு திரும்பவுள்ளனர்.

நாட்டில் கொரோனா வைரஸ் தொற்றிலிருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,257 ஆக உயர்வடைந்துள்ளது. படையினரால் மேற்பார்வை செய்யப்படும் 62 தனிமைப்படுத்தல் மையங்களில் சுமார் 6,594 பேர் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.  

கடந்த 24 மணித்தியாலங்களில் வைரஸ் தொற்றுக்குள்ளான  எவரும் உயிரிழக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.