பல பகுதிகளில் கனமழை பெய்யும் என வானிலை நிலையம் தெரிவிப்பு
ஜனவரி 31, 2023வடக்கு, கிழக்கு, வடமத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் இன்று (ஜனவரி 31) பலத்த மழை பெய்யும் என எதிர்வு கூறப்பட்டுள்ளது.
இன்று காலை வெளியிடப்பட்ட காலநிலை அவதானிப்பு திணைக்களத்தின் வானிலை அறிக்கைக்கு அமைய, கிழக்கு, ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் பொலன்னறுவை மாவட்டத்தின் சில இடங்களில் சுமார் 150 மில்லிமீற்றர் வரையான பலத்த மழை பெய்யக்கூடும் எனவும் வடமேற்கு மற்றும் வடக்கு மாகாணங்கள் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான மழை பெய்யக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய தென்மேற்கு வங்காள விரிகுடாவில் காற்றழுத்த தாழ்வு நிலை, திருகோணமலைக்கு கிழக்கு-தென்கிழக்கே சுமார் 455 கிமீ தொலைவில் அட்சரேகை 8.1°N மற்றும் தீர்க்கரேகை 85.3°Eக்கு அருகில் மையம் கொண்டுள்ளது. இது இன்று மாலை வரை மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து, பின்னர் படிப்படியாக தெற்கு-தென்மேற்கு திசையில் திரும்பி, நாளை (பெப்ரவரி 01) முற்பகல் இலங்கையின் கரையைக் கடக்கும் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
கிழக்கு, ஊவா, மேல், மத்திய மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி, மாத்தறை, முல்லைத்தீவு, யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 50-60 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும்.
பொத்துவிலிலிருந்து மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் காங்கேசன்துறை ஊடாக மன்னார் வரையான கரையோரப் பகுதிகளில் சுமார் 2.5 – 3.0 மீ உயரத்திற்கு கடல் அலைகள் அதிகரிக்கும் சாத்தியம் காணப்படுகின்றது.
நாட்டை சூழவுள்ள கடற்பரப்புகள் கொந்தளிப்பாகவும், இடியுடன் கூடிய மழை பெய்யும் போது தற்காலிகமாக பலத்த காற்று வீசுவதுடன், கடல் மிகவும் கொந்தளிப்பாகவும் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் நாட்டைச் சூழவுள்ள கடலில் மீன்பிடி மற்றும் கடல் நடவடிக்கைகளில் ஈடுபடுவதை தவிர்க்குமாறும் மக்கள் அறிவுறுத்தப்பட்டிருக்கிறார்கள்.