சட்டவிரோத ஆயுதங்களை அரசிடம் ஒப்படைக்க விஷேட காலஅவகாசம் அறிவிப்பு

பெப்ரவரி 11, 2023

பாதுகாப்பு அமைச்சின் எழுத்துமூல அனுமதிப்பத்திரமின்றி தன்வசம் வைத்திருக்கும் அனைத்துவிதமான சட்டவிரோத ஆயுதங்களையும் அரசிடம் ஒப்படைப்பதற்கான கால அவகாசம் அறிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய, 2023ஆம் ஆண்டு பெப்ரவரி 06ஆம் திகதி தொடக்கம் மார்ச் மாதம் 15ஆம் திகதி வரையிலான காலப்பகுதியே விஷேட காலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசாங்கத்தினால் வெளியிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 06ஆம் யதிகதியிடப்பட்ட, 2318/02 என்ற இலக்கம் விஷேட வர்த்தமானிக்கு அமைவாவே இந்த கால அவகாசத்தை பாதுகாப்பு அமைச்சு அறிவித்துள்ளது.

எனவே, அரசாங்கத்தின் எழுத்துமூல அனுமதிப்பத்திரமில்லாத சட்டவிரோத ஆயுதங்களை குறித்த காலப்பகுதிக்குள் தத்தமது பிரதேசங்களிலுள்ள பொலிஸ் நிலைகளில் ஒப்படைக்குமாறு பாதுகாப்பு அமைச்சு கேட்டுக்கொண்டுள்ளது.

இந்த காலப்பகுதிக்குள், சட்டவிரோத ஆயுதங்களை ஒப்படைக்கும் எவருக்கும் எதிராக எந்தவித சட்ட நடவடிக்கைகளும் எடுக்கப்படாது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இவ்வாறு வழங்கப்பட்டுள்ள இந்த காலக்கெடு முடிந்ததும், சட்டவிரோத ஆயுதங்களை பறிமுதல் செய்யவும், துப்பாக்கி வைத்திருப்பவர்களை கைது செய்யவும் அவ்வாறு வைத்திருப்பவர்கள் தொடர்பில் சட்டத்தை அமுல்படுத்தவும் பொலிஸாரால் நாடளாவிய ரீதியில் விஷேட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

எனவே, சட்டவிரோத ஆயுதங்களை வைத்திருந்ததற்காக கைது செய்யப்படுவதையும், வழக்குத் தொடரப்படுவதையும் தவிர்ப்பதற்கு இந்த காலக்கெடுவை பயன்படுத்துமாறு அனைத்து துப்பாக்கி உரிமையாளர்களையும் இலங்கை அரசாங்கம் கேட்டுக்கொள்கிறது.

அத்துடன், பாதுகாப்பு அமைச்சின் மேலதிகச் செயலாளர் (சிவில் பாதுகாப்பு மற்றும் மேம்பாடு) திரு டி. எம். சமன் திசாநாயக்கவை 011-2335792 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தொடர்பு கொண்டு இது தொடர்பான மேலதிக விவரங்களை பெற்றுக்கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.