சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலின் வருடாந்த ஓட்டம் - 2023
பாதுகாப்புச் செயலர் கலந்து கொண்டார்

பெப்ரவரி 18, 2023

இலங்கை விமானப்படையால் இந்த ஆண்டு ஏற்பாடு செய்யப்பட்ட சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM) தின ஓட்டம் இன்று (பிப்ரவரி 18) காலை கொழும்பு ரைபிள் கிரீன் மைதானத்தில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன அவர்களின் பங்குபற்றலுடன் நடைபெற்றது.

இவ்வருட சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் (CISM)  ஓட்டம் இலங்கை விமானப்படையால் ஏற்பாடு செய்யப்பட்டதுடன் இந்நிகழ்வுக்கு வருகை தந்த பாதுகாப்பு செயலாளரை  இலங்கை விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ, வரவேற்றார்.

பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி, இராணுவம் மற்றும் கடற்படைத் தளபதிகள், சிரேஷ்ட முப்படை அதிகாரிகள் மற்றும் அங்கவீனமுற்ற போர் வீரர்கள் உட்பட பெருமளவிலான முப்படை வீரர்களின் பங்கேற்புடன் இவ்வருட நிகழ்வு இடம்பெற்றது.

1948 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் 18 ஆம் திகதி நிறுவப்பட்டு 75 ஆண்டுகளை எட்டியுள்ள சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சிலுக்கு (CISM) இது ஒரு மைல்கல் ஆண்டு என்பது குறிப்பிடத்தக்கது.

உலகெங்கிலும் உள்ள ஆயுதப்படை உறுப்பினர்களுக்காக இவ்வருட சர்வதேச இராணுவ விளையாட்டு கவுன்சில் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்கிறது. இது உறுப்பு நாடுகளைச் சேர்ந்த இராணுவ வீரர்களை ஒன்றிணைப்பதன் மூலம் விளையாட்டுக் களத்தில் நட்பு மற்றும் நட்புறவை வலுப்படுத்த உதவுகிறது.

நிகழ்வின் முடிவில் பாதுகாப்பு செயலாளர் மற்றும் இராணுவ பிரதானிகள் இந்நிகழ்வில் பங்குபற்றியவர்களுக்கு சான்றிதழ்களை வழங்கி வைத்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.