ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம்

பெப்ரவரி 19, 2023

தேசிய மாணவர் படையணியின் வர்ணம் சூட்டும் விழாவில் ஜனாதிபதி தெரிவிப்பு

ஒரு நாட்டின் எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் அவசியம் எனவும், ஒழுக்கமான சமூகத்தின் ஊடாக இலங்கையை புதிய பரிமாணத்திற்கு கொண்டு செல்வதற்கான திட்டங்களை அடுத்த வருடம் முதல் நடைமுறைப்படுத்தவுள்ளதாகவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் வலியுறுத்தினார்.

இன்று மக்கள் பொருளாதார ரீதியாக சிரமங்களை எதிர்நோக்கி வருகின்ற போதிலும் இதனை குறுகிய காலத்திற்கே எதிர்பார்க்க வேண்டும் என்று குறிப்பிட்ட ஜனாதிபதி, இந்த வருட இறுதிக்குள் நாட்டு மக்களின் பொருளாதாரத்தை சிறந்த நிலைக்கு உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுப்பதாகவும் குறிப்பிட்டார்.

தேசிய மாணவர் படையணிக்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் வழங்கும் முகமாக இன்று (19) ரன்தம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

142 வருட வரலாற்றைக் கொண்ட தேசிய மாணவர் படையணிக்கு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்களினால் ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் என்பன சூட்டப்பட்டன.

ஜனாதிபதி மற்றும் படையணி வர்ணங்களை வழங்கிய பின்னர், மாணவர் படையணியின் அணிவகுப்பை ஜனாதிபதி கண்டுகளித்தார்.

நாட்டில் வலுவான பொருளாதாரம் மற்றும் புதிய சமூகமொன்று உருவாக்கப்பட வேண்டும் என்று சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, நாட்டின் இளைஞர்களுக்காக உருவாக்கப்படும் புதிய சமூகத்திற்கு, ஒழுக்கமான தலைமைத்துவத்தை மாணவர் படையணி வழங்கும் என எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க அவர்கள்,

இன்று உங்களுக்கு சிறப்பான நாள். தேசிய மாணவர் படையணியின் தேசிய மதிப்பை நாங்கள் அங்கீகரிக்கிறோம். அதற்காக தேசிய மாணவர் படைக்கு ஜனாதிபதி வர்ணமும் , படையணி வர்ணமும் கிடைத்துள்ளது. இந்த படையணி மிகவும் பழைய பிரிவாகும். இலங்கை காலாட்படை ஸ்தாபிக்கப்பட்ட போது, ரோயல் கல்லூரி மாணவர் படையணியை உருவாக்கியது.

அங்கு தொடங்கப்பட்ட மாணவர் படையணி 142 வருட வரலாறு கொண்டது. அதிலிருந்து வெளிவந்த இராணுவ அதிகாரிகள் முதலாவது உலகப் போரில் கலந்து கொண்டனர். சில அதிகாரிகளும் அங்கு தங்கள் உயிரை தியாகம் செய்ய நேரிட்டது. இந்த மாணவர் படையணி அதிகாரிகள் இரண்டாம் உலகப் போரிலும், உள்நாட்டுப் போர்களிலும் பங்கேற்றுள்ளனர். மேலும், மாணவர் படையணியின் உறுப்பினர்கள் முப்படைகளுக்கு பெரும் பங்களிப்பை வழங்கியுள்ளனர். அந்தச் செயல்பாடுகளைப் பாராட்டுவதற்காகவே தான் இன்று இந்த நிகழ்வில் பங்கேற்கிறோம்.

இலங்கை காலாட்படையில் தொடங்கி, முதலில் இலங்கை பாதுகாப்புப் படையின் கீழும் பின்னர் இலங்கை இராணுவத்தின் கீழும் மாணவர் படையணி பரிணமித்துள்ளது. இந்தப் படைக்கு தேசிய மாணவர் படையணி (கெடட் படை) என்று பெயரிடுவதற்கான பிரேரணையை கல்வி அமைச்சர் என்ற வகையில் நான் அன்று பாராளுமன்றத்தில் சமர்ப்பித்தேன். மேலும் இன்று ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணங்களை தேசிய மாணவர் படையணிக்கு வழங்குவதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைத்துள்ளது.

இந்த மாணவர் படையணியில் இருந்துதான் நாட்டின் எதிர்காலத்திற்கு தேவையான நபர்கள் பயிற்சி பெறுகிறார்கள். அத்துடன் இராணுவத்தில் இணைந்த மாணவர் படையினர் போன்றே , இராணுவத்தில் இல்லாவிட்டாலும் பல்வேறு துறைகளில் சேவையாற்றியவர்கள் ஏராளமாக உள்ளனர். அந்தக் குழுவில் நமது பிரதமர் தினேஷ் குணவர்தன முக்கிய இடத்தைப் பெறுகிறார். பாடசாலை நாட்களில் அவர் மாலை வேளையில் அந்தப் பயிற்சிகளில் கலந்துகொண்ட விதம் எனக்கு நினைவிருக்கிறது.

இன்று உங்களுக்கு ஜனாதிபதியின் வர்ணங்களை வழங்கும் நேரத்தில் இந்த மாணவர் படையணியை ஆரம்பித்தவர்களுக்கும், அதன் உயர்வுக்கு பங்களித்தவர்களுக்கும் மற்றும் அனைத்து மாணவர் படைகளுக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்வது எங்கள் கடமையாகும்.

இன்று மாணவர் படையணிகள் பல பாடசாலைகள் பலவற்றில் செயல்படுகின்றன. ஒவ்வொரு மத்திய கல்லூரியிலும் மாணவர் படையணிகளை உருவாக்க வேண்டும் என பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருக்கும் செயலாளருக்கும் அறிவித்துள்ளேன். இதை நாம் மென்மேலும் வளர்க்க வேண்டும். இந்த நாட்டிற்குத் தேவையான ஒழுக்கமான குடிமக்களை இது உருவாக்கும் என்று நான் நம்புகிறேன்.

மேலும், இந்த மாணவர் படையிலுள்ள மாணவர்களுக்கு நல்ல எதிர்காலத்தை உருவாக்குவது அரசாங்கத்தின் பொறுப்பாகும். மாணவர் படைக் குழுக்களில் உள்ள மாணவர்களுக்கு அரச நிறுவனங்களில் பயிற்சி அளிக்க தேவையான ஒதுக்கீட்டை வழங்க வேண்டும் என்று இராஜாங்க அமைச்சர் இங்கு இருக்கும் வேளையில் பரிந்துரைக்கிறேன். இவர்களின் எதிர்காலத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஏனென்றால், ஒழுக்கத்துடன் முன்னேறும் உங்களுக்குப் பயிற்சி அளிக்க நாங்கள் நம்மை அர்ப்பணிக்க வேண்டும்.

அதே போன்று உங்கள் எதிர்காலத்தில் நாங்கள் கவனம் செலுத்தியுள்ளோம். நீங்களும், உங்கள் பெற்றோர்களும், நாட்டு மக்களும் இன்று சந்திக்கும் சிரமங்களை நான் நன்கு புரிந்து கொண்டுள்ளேன். பொருளாதார ரீதியாக நாம் அனைவரும் பெரும் சுமையை சுமக்க வேண்டியுள்ளது. எங்களுக்கு வேறு வழியில்லை. மக்கள் இன்று சிரமங்களை எதிர்கொள்ள வேண்டியுள்ள போதும் இது ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே எதிர்பார்க்கப்பட வேண்டும். இந்த ஆண்டு முடிவதற்குள் இந்நிலை மாறுவது மட்டுமன்றி, அதன் பின்னர் நாம் புதிய பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப வேண்டும்.
வலுவான பொருளாதாரத்தையும் புதிய சமூகத்தையும் உருவாக்க வேண்டும். அந்த சமுதாயத்தை நாட்டின் இளைஞர்களுக்காக உருவாக்கி வருகிறோம். அத்தகைய புதிய சமூக அமைப்பை உருவாக்க ஒழுக்கமான தலைமைத்துவம் தேவை. மாணவர் படையிலிருந்து அத்தகைய தலைமைத்துவம் உருவாகுமென்று நம்புகிறேன்.

எதிர்காலத்தை பொறுப்பேற்பதற்கு ஒழுக்கமும் அர்ப்பணிப்பும் தேவை. அதற்குத் தகுதியானவர்கள் இருக்கும் இந்த மாணவர் படையை முன்னேற்றவும் அதில் உள்ள அனைவரின் எதிர்காலத்தை மேம்படுத்தவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம் என்று ஞாபகப்படுத்துகிறேன்.

142 வருடங்களாக இந்த நாட்டிற்கு சேவையாற்றியுள்ள மாணவர் படைக்கு ஜனாதிபதி வர்ணம் மற்றும் படையணி வர்ணம் வழங்கப்படும் இந்த சந்தர்ப்பத்தில் அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன், மத்திய மாகாண ஆளுநர் சட்டத்தரணி லலித் யு கமகே, தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் (ஓய்வுபெற்ற) கமல் குணரத்ன,கல்வி அமைச்சின் செயலாளர் நிஹால் ரணசிங்க, பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, தேசிய மாணவர் படையணிப் பணிப்பாளர் பிரிகேடியர் சுதந்த பொன்சேக்கா உள்ளிட்டோர் இந்தநிகழ்வில் கலந்துகொண்டனர்.