பாகிஸ்தான் கடற்படை தளபதி இலங்கை பாதுகாப்பு செயலாளரை சந்தித்தார்

பெப்ரவரி 27, 2023

உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு இலங்கை வந்துள்ள பாகிஸ்தான் கடற்படைத் தளபதி அட்மிரல் முஹம்மது அம்ஜத் கான் இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவைச் சந்தித்தார்.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த ஜெனரல் கான் தலைமையிலான பாகிஸ்தானின் கடற்படைக் தூதுக்குழுவை இலங்கை பாதுகாப்பு படைகள் சார்பாக பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன வரவேற்றார். இந்த சந்திப்பின் போது பல முக்கிய விடயங்கள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டன.

இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால நட்புறவுகளை நினைவுகூர்ந்த ஜெனரல் கமல் குணரத்ன, சாதாரண காலங்களிலும் கடினமான காலங்களிலும் பாகிஸ்தான் தொடர்ந்து பேணுகின்ற தொடர்பை விஷேடமாக பாராட்டியதுடன் இரு நாடுகளுக்கும் இடையிலான தொடர்ச்சியான பயிற்சி வாய்ப்புகளை மேலும் உறுதிப்படுத்துவது தொடர்பாகவும் கலந்துரையாடினார்.

இலங்கையில் தங்கியிருக்கின்ற காலத்தில் மிகவும் சிறப்பாக வழங்கப்படும் விருந்தோம்பலைப் பாராட்டிய அட்மிரல் கான் தற்போதுள்ள வலுவான ஒத்துழைப்பை மேலும் பேணுவதன் முக்கியத்துவத்தையும் இந்த சந்திப்பின் போது சுட்டிக்காட்டினார்.

கடந்த காலங்களில் பாகிஸ்தான் இலங்கைக்கு வழங்கி வரும் முழுமையான ஒத்துழைப்பை நினைவுகூர்ந்த பாகிஸ்தான் உயர் அதிகாரிகள் எதிர்காலத்திலும் இலங்கைக்கு தமது தொடர்ச்சியான ஒத்துழைப்புக்களை வழங்கும் எனவும் உறுதியளித்தனர்.

இந்த சந்திப்பினை நினைவுகூரும் வகையில் இரு பாதுகாப்பு உயர் அதிகாரிகளுக்கும் இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார மற்றும் இலங்கையிலுள்ள பாகிஸ்தான் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கேர்ணல் முஹம்மட் சப்தர் கான் ஆகியோரும் இந்த சந்திப்பின் போது கலந்துகொண்டனர்.