இத்தாலிய தூதுவர் பாதுகாப்பு செயலாளருடன் சந்திப்பு

மார்ச் 15, 2023

இலங்கை மற்றும் மாலைதீவுக்கான இத்தாலிய தூதுவர் அதிமேதகு ரிடா ஜூலியானா மன்னெல்லா இலங்கை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.

கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரயிலுள்ள பாதுகாப்பு அமைச்சில் இன்று (மார்ச் 15) இந்த சந்திப்பு இடம்பெற்றது.

பாதுகாப்பு அமைச்சுக்கு வருகை தந்த இத்தாலிய தூதுவர் தலைமையிலான குழுவினர் பாதுகாப்புச் செயலாளரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இவர்களுக்கிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

ஜெனரல் குணரத்னவுக்கும் தூதுவர் மன்னெல்லாவுக்கும் இடையிலான இந்த சந்திப்பின் போது இரு நாடுகளுக்கும் இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக சினேக பூர்வ கலந்துரையாடல் இடம்பெற்றது.

இத்தாலிய தூதுவர் இலங்கையின் இயற்கை அழகு மற்றும் அதன் சுற்றுலா தலங்கள் குறித்தும் தனது பாராட்டுக்களை தெரிவித்தார்.

இந்த சந்திப்பின் போது இராணுவ பயிற்சி பரிமாற்றத்தை மேம்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்து இத்தாலிய பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் பேபியோ சிமா பாதுகாப்பு செயலாளருடன் கலந்துரையாடினார்.

இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில் இத்தாலிய தூதுவர் மற்றும் பாதுகாப்பு செயலாளருக்கு இடையில் நினைவுச் சின்னங்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

பாதுகாப்பு அமைச்சின் இராணுவ இணைப்பு அதிகாரி மேஜர் ஜெனரல் தினேஷ் நாணயக்கார அவர்களும் இந்த சந்திப்பில் கலந்து கொண்டார்.