மழையுடனான காலநிலை நிலவும் - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

மார்ச் 16, 2023

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய வானிலை முன்னறிவிப்புகளின்படி, நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.

மேற்கு, சப்ரகமுவ, வடமத்திய, வடமேல் மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி, மாத்தறை, கண்டி, நுவரெலியா மற்றும் மன்னார் மாவட்டங்களிலும் பல இடங்களில் பிற்பகலில் அல்லது இரவில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என இன்று (மார்ச் 16) காலை வெளியிடப்பட்ட வானிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும், களுத்துறை, காலி மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் என அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கிழக்கு மாகாணத்தின் கரையோரப் பிரதேசங்களிலும் சிறிதளவு மழை பெய்யக்கூடும்.

இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் அப்பிரதேசங்களில் தற்காலிகமாக பலத்த காற்றும் வீசக்கூடும். மின்னல் தாக்கங்களினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துக்கொள்ளுமாறு பொதுமக்கள் அறிவுறுத்தப்படுகின்றார்கள்.