இராணுவத்தினரால் கிராமப்புற மாணவர்களுக்கு பாடசாலை உபகரணங்கள் அன்பளிப்பு

மார்ச் 20, 2023

இலங்கை இராணுவத்தினரால் பெரியமடு முஸ்லிம் பாடசாலை மற்றும் தச்சன்மரடமடு அரசினர் தமிழ் கலவன் பாடசாலை மாணவர்களுக்கு ஒரு தொகை பயிற்சி புத்தகங்கள் மற்றும் பாடசாலை கற்றல் உபகரணங்கள் அண்மையில் பெரியமடு முஸ்லிம் பாடசாலை வளாகத்தில் இடம்பெற்ற நிகழ்வின்போது விநியோகிக்கப்பட்டன.

அதன்படி வன்னி பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் 65வது காலாட் படைப்பிரிவின் 653வது காலாட் பிரிகேட் படையினரால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த நிகழ்வுக்கு அனுசரணையாளர்கள் மற்றும் நலன் விரும்பிகள் குழுவினால் நிதியுதவியும் வழங்கப்பட்டது.

இந்த நிகழ்வை 653வது காலாட் பிரிகேட் தளபதி பிரிகேடியர் நாமல் சேரசிங்க அவர்கள் ஒருங்கிணைத்ததாக இலங்கை இராணுவ தகவல்கள் தெரிவிக்கின்றன.

மடு மாதா ஆலயத்தின் நிருவாகி அருட்தந்தை பெப்பி சூசை, 65வது படைப்பிரிவின் தளபதி மேஜர் ஜெனரல் பிரசாத் எதிரிசிங்க, சிரேஷ்ட அதிகாரிகள், பாடசாலை சமுகம் மற்றும் மாணவர்கள் ஆகியோர் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.