--> -->

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டத்தை காலத்திற்கு ஏற்றவாறு திருத்த கவனம் செலுத்ப்படும் – பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்

மார்ச் 31, 2023

தேசிய மாணவர் படையணியின் பாடத்திட்டம்  காலத்திற்கு ஏற்றவாறு எதிர்காலத்தில் மாற்றியமைக்கப்படும் என தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், ரண்டம்பே தேசிய மாணவர் படையணி பயிற்சி நிலையத்திற்கு மேலதிகமாக  வேறு  இடங்களிலும் பயிற்சிகளை விரிவுபடுத்தவும், வசதிகளை பெற்றுக் கொடுப்பதற்கும் கவனம் செலுத்தப்படும் எனவும் குறிப்பிட்டார்.
                
ஸ்ரீ ஜயவர்தனபுர கோட்டே பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு இன்று (மார்ச் 31) விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன், தேசிய மாணவர் படையணியின் அதிகார்கள் மத்தியில் உரையாற்றும் போதே இவ்வாறு தெரிவித்தார்.

பாதுகாப்புத் தலைமையக வளாகத்தில் அமைந்துள்ள இராணுவத் தலைமையகத்திற்கு வருகை தந்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோனை,
பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சன்ன வீரசூரிய மற்றும் தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர்  பிரிகேடியர் சுதந்த பொன்சேகா ஆகியோர் அன்புடன் வரவேற்றனர்.

இதன்போது தேசிய மாணவர் படையணியின் அதிகாரிகளுடன் சுமூகமான கலந்துரையாடலிலும் அமைச்சர்  ஈடுப்பட்டார்.

நாட்டில் பயங்கரவாதத்தினால்  ஏற்பட்ட முரண்பாடு மற்றும்  தேசிய அபிவிருத்திச் செயற்பாடுகளின் போது தேசிய மாணவ படையணி ஆற்றிய பெறுமதிமிக்க சேவைகளை இராஜாங்க அமைச்சர்  தனது உரையின் போது பாராட்டினார்.

ஒழுக்கமான மற்றும் தரமான  குடிமகனை உருவாக்க தேசிய மாணவர் படையணி ஆற்றிவரும் ஒத்துழைப்புக்களை பாராட்டிய பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர், தேசிய மாணவர் படையணி பயிற்சிகளுக்காக இதுவரை வழங்கப்பட்டுள்ள வசதிகளுக்கு  மேலதிகமாக வசதிகள் வழங்கப்படும்.  அதேசமயம் மேலும் ஆட்சேர்ப்பின் போது தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகளுக்கும் கூடுதலான வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

இச்சந்திப்பினை நினைவு கூறும் வகையில்  தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் பொன்சேகா அவர்கள் வருகை தந்த உயர் அதிகாரிகளுக்கு நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார்.

இந்நிகழ்வில் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் தேசிய மாணவர் படையணியில் சேவையாற்றும் பெரும் எண்ணிக்கையிலான படையினர் கலந்துகொண்டனர்.