--> -->

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் இந்திய கடற்படை கப்பலை பார்வையிட்டார்

ஏப்ரல் 05, 2023

கொழும்பு துறைமுகத்தில் நடைபெறும் SLINEX-23 கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்கும் 'ஐஎன்எஸ் கில்தான்' என்ற இந்திய கடற்படைக் கப்பலை பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரேமித பண்டார தென்னகோன் இன்று (ஏப்ரல் 05) பார்வையிட்டார்.

இன்று காலை கப்பலுக்கு சென்ற இராஜாங்க அமைச்சரை இந்தியாவின் இரு கப்பல்களின் கட்டளை அதிகாரிகள் வரவேற்றனர்.

இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் அதிமேதகு கோபால் பாக்லே அவர்களும் இந்த விஜயத்தின் போது கலந்து கொண்டார்.

கொழும்பில் நடைபெறும் வருடாந்த இலங்கை - இந்திய கடற்படை கூட்டுப் பயிற்சியில் (SLINEX) -23 பங்கேற்பதற்காக 'ஐஎன்எஸ் கில்தான்' (INS Kiltan) மற்றும் 'ஐஎன்எஸ் சாவித்ரி' (INS Savitri) ஆகிய இரு கப்பல்களும் (ஏப்ரல் 03ஆம் திகதி) இலங்கையை வந்தடைந்தது.

இராஜாங்க அமைச்சர் தென்னகோன் மற்றும் இலங்கைக்கான இந்தியத் தூதுவர் ஆகியோருக்கு இரு கப்பல்களின் கட்டளை அதிகாரிகளும் கூட்டு கடற்படைப் பயிற்சியின் போது நடைபெறவிருக்கும் நிகழ்வுகள் குறித்து விளக்கமளித்தனர்.

இதன்போது அவர்கள் கப்பல்களின் திறன்கள் மற்றும் தொழில்நுட்ப விடயங்களை இராஜாங்க அமைச்சருக்கு விளக்கமளித்தனர். அத்துடன் இரு கப்பல்களின் பணியாளர்களுடன் புகைப்பமும் எடுத்துக் கொண்டனர்.

இராஜாங்க அமைச்சருக்கும் வருகை தந்துள்ள இரு இந்திய கப்பல்களின் கட்டளை அதிகாரிகளுக்கும் இடையில் சுமுகமான கலந்துரையாடல் இடம்பெற்றதுடன் இராஜாங்க அமைச்சரின் வருகையை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொண்டனர்.

இந்நிகழ்வுக்கு இந்திய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூதும் கலந்து கொண்டார்.