--> -->

தேசிய அபிவிருத்திக்காக நாட்டு மக்கள் ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்துடன் செயற்பட வேண்டும் என இராஜாங்க அமைச்சர் தென்னகோன் வேண்டுகோள் விடுத்தார்

ஏப்ரல் 06, 2023
  • பேருவளையில் இஸ்லாமியர்களின் ரமழான் நோன்பு துறக்கும் ‘இப்தார்’ நிகழ்வில் கலந்து சிறப்பித்தார்.
  • ஜனாதிபதியின் தலைமையின் கீழ் நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீண்டுள்ளது எனவும் தெரிவித்தார்.
  • அரசு குற்ற செயல்களை கட்டுப்படுத்த பயனுள்ள நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

நாட்டின் அண்மைய கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கு அரசாங்கம்  முன்னெடுத்த சிறந்த பொருளாதார முயற்சியின் பலன்களை நாட்டு மக்கள் தற்போது  அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர்.

மேலும் முன்னேற அனைத்து மக்களும் ஒன்றிணைந்து தேசிய வளர்ச்சிக்காக ஒற்றுமையாக செயல்பட வேண்டும் எனவும் கேட்டுக் கொண்டார்.

நேற்று மாலை (ஏப்ரல் 05) பேருவளையில் நடைபெற்ற இஸ்லாமியர்களின் ரமழான் இப்தார் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இதன்போது இங்கு வருகை தந்திருந்த ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த இராஜாங்க அமைச்சர், ஜனாதிபதியின் தலைமையின் கீழ் கடுமையான பொருளாதார நெருக்கடியிலிருந்து மீள்வதற்கும், குற்றச்செயல்களை கட்டுப்படுத்துவதற்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இவற்றை தொடர்ச்சியாக கொண்டு செல்வதற்கான பொறுப்பு எமக்கு இருப்பதாகவும் தெரிவித்தார்.

அத்துடன் அடக்குமுறை கொள்கையில் எங்களுக்கு நம்பிக்கை இல்லை, மக்களின் வாழ்க்கையை சீர்குலைக்க யாரையும் அனுமதிக்க முடியாது எனவும் இராஜாங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

சீனக்கோட்டையில் ‘இப்தார்’ நிகழ்விற்காக வருகைதந்து இராஜாங்க அமைச்சர் தென்னகோன் அவர்கள் பேருவளையில் உள்ள முக்கியஸ்தர்கள் பலரால் வரவேற்கப்பட்டார்.

மக்கள் மத்தியில் ஒற்றுமையின் அவசியத்தை இதன்போது வலியுறுத்திய இராஜாங்க அமைச்சர், “புதிய ஜனாதிபதி மற்றும் புதிய அரசாங்கத்தின் தலைமையின் கீழ் நாம் புதிய தொலைநோக்குப் பார்வையுடன் செயற்படுகிறோம்”.

மேலும் மக்கள் மத்தியில் உள்ள அவநம்பிக்கை மற்றும் ஒற்றுமையின்மை முதலில் அகற்றப்பட வேண்டும், ஒரு சிறந்த இலங்கையை கட்டியெழுப்புவதற்கான நம்பிக்கையையும் ஒற்றுமையையும் கட்டியெழுப்ப வேண்டும் என்றார்.

எனவே அனைவரும் ஒற்றுமையுடனும், நல்லிணக்கத்துடனும் பணியாற்றுமாறு கேட்டுக்கொள்கிறேன் என்றும் மேலும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்வில் சமூகத் தலைவர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் வர்த்தகர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.