இராணுவத்தினரால் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த வறிய
குடும்பங்களுக்கு வீடுகள் நிர்மாணிப்பு
ஏப்ரல் 11, 2023
யாழ்ப்பாண பாதுகாப்புப் படைத் தலைமையகத்தின் இலங்கை இராணுவ துருப்புக்கள் நன்கொடையாளர்களின் ஆதரவுடன் யாழ்ப்பாணம் துன்னாலை மற்றும் கட்டுடை ஆகிய இடங்களில் வறுமைக்கோட்டின் கீழ் வசிக்கும் இரு குடும்பங்களுக்கு புதிய வீடுகளை நிர்மாணித்துள்ளது.
அண்மையில் இடம்பெற்ற வைபவத்தின் போது இப்புதிய வீடுகள் இரு குடும்பங்களுக்கும் கையளிக்கப்பட்டன.
இலங்கை இராணுவத்தின் 4வது இலங்கை சிங்கப் படையணியால் நிர்மாணிக்கப்பட்ட இந்த புதிய வீடு துன்னாலை (தெற்கு) கரவெட்டியில் வசிக்கும் மாற்றுத்திறனாளியான கணவரும் இரண்டு குழந்தைகளும் உள்ள திருமதி ரதீஸ்வரன் ராசேஸ்வரி அவர்களுக்கு வழங்கிவைக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த வீட்டிற்கான அனுசரணையை மட்டக்குளி லயன்ஸ் கழகத்தின் ஒருங்கிணைப்புடன் திருமதி தபிதா சின்னையா மற்றும் வன்னி எய்ட் அமைப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது.
இதேவேளை, மானிப்பாய் (மேற்கு) கட்டுடையில் உள்ள திரு.பெர்னாண்டோ ரெனுஷானின் வறிய குடும்பம் ஒன்றுக்கு 51வது காலாட்படைப் பிரிவின் 513வது படைப் பிரிவு மற்றும் 11வது இலங்கை இலகு காலாட் படையினரால் நிர்மாணிக்கப்பட்ட புதிய வீடு ஒன்று கையளிக்கப்பட்டது.
கனடாவின் ஒன்ராறியோவில் உள்ள திரு.சின்னதுரை செந்திவேல் குடும்பத்தினர், காலஞ்சென்ற கட்டுடையைச் சேர்ந்த திரு,திருமதி தங்கம்மா சின்னதுரையின் நினைவாக, 'வன்னி எய்ட் கனடா', மோதர மட்டக்குளிய லயன்ஸ் கழகம் ஆகியன இணைந்து இத்திட்டத்திற்கு நிதி அனுசரணையை வழங்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இத் திட்டம் யாழ். பாதுகாப்பு படைத் தலைமையக தளபதி மேஜர் ஜெனரல் ஸ்வர்ண போத்தோட்டவின் அறிவுறுத்தலின் கீழ் மேற்கொள்ளப்பட்டதுடன், இரண்டு வீடுகளுக்குமான நிதி அனுசரணை மேஜர் ஜெனரல் ரவி ரத்னசிங்கம் (ஓய்வு) அவர்களினால் ஒருங்கிணைக்கப்பட்டதாக இராணுவத் தகவல்கள் மேலும் தெரிவிக்கின்றன.
இவ்வீடுகளை கையளிக்கும் வைபவத்தில் இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள், அரச அதிகாரிகள், அனுசரணையாளர்கள், பொதுமக்கள் மற்றும் பயனாளிகளின் குடும்ப உறுப்பினர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.