இலங்கைக்கான மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரைச் சந்தித்தார்

ஏப்ரல் 12, 2023

இலங்கைக்கான மாலைதீவுக் குடியரசின் உயர்ஸ்தானிகர் அதிமேதகு அலி பாயிஸ் அவர்கள் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த  பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (ஏப்ரல் 12) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த  மாலைதீவு உயர்ஸ்தானிகர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இரு நாடுகளுக்குமிடையிலான நீண்டகால ஒத்துழைப்பையும் மற்றும் இருதரப்பு உறவுகளையும் மேலும் மேம்படுத்தவும் இந்த சந்திப்பின் போது சுமுகமாக கலந்துரையாடப்பட்டது.

மேலும் இக்கலந்துரையாடலின் போது, இரு நாடுகளுக்குமிடையில் நீண்டகாலமாக நிலவிவரும் நல்லுறவை நினைவுகூர்ந்த இராஜாங்க அமைச்சர், மாலைதீவு இலங்கைக்கு எப்போதும் நட்புறவாக இருந்து வருவதாக சுட்டிக்காட்டினார்.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த உயர்ஸ்தானிகர் மாலைதீவு இலங்கைக்கு முழுமையான ஆதரவை வழங்குவதாக உறுதியளித்ததுடன், மாலைதீவுக்கு எப்போதும் நண்பனாக இருந்துவரும் இலங்கைக்கு தனது நன்றியையும் தெரிவித்தார்.

இந்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் மாலைதீவு உயர்ஸ்தானிகர் ஆகியோருக்கிடையில் நினைவுச் சின்னங்களும் பரிமாறிக் கொள்ளப்பட்டது.

மாலைதீவு உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் லெப்டினன்ட் கேர்ணல் ஹசன் அமீரும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டார்.