--> -->

பாதுகாப்பு அமைச்சினால் ஏற்பாடு செய்யப்பட்ட ‘பக்மஹ உலேல’ புத்தாண்டு நிகழ்வில் ஜனாதிபதி பங்கேற்பு

ஏப்ரல் 19, 2023

பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் கோட்டே, ஸ்ரீ ஜயவர்தனபுரவில் அமைந்துள்ள பாதுகாப்பு தலைமையக வளாகத்தில் இன்று (19) நடைபெற்ற சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விழாவில் கெளரவ ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்கள் கலந்து சிறப்பித்தார்.

பாதுகாப்பு அமைச்சின் நலன்புரிப் பிரிவின் அனுசரணையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இலங்கையின் பிரதான பாரம்பரிய விழாக்களில் ஒன்றான சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டின் 'பக்மஹ உலேல' நிகழ்வு அமைச்சின் அனைத்து ஊழியர்களின் பங்குபற்றுதலுடன் இன்று இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனாதிபதியின் தேசிய பாதுகாப்பு தொடர்பான சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதியின் பணிக்குழாம் பிரதம அதிகாரியுமான திரு. சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மற்றும் பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன ஆகியோரும் கலந்துகொண்டனர்.

 பாரம்பரிய சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு விளையாட்டுக்களுக்கு குறிப்பிட்ட வயதுப் பிரிவுகள் இல்லாததால், பாதுகாப்பு அமைச்சின் அனைத்து ஊழியர்களும் விளையாட்டுகளில் மிகுந்த ஆர்வத்துடன் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வின் போது கலாசார நடனம் மற்றும் இசை நிகழ்ச்சிகளும் இடம்பெற்றன.

இந்த நிகழ்வின் சிறப்பம்சமாக 'அவுருது குமார' மற்றும் குமாரி'யைத் தெரிவு செய்வதற்கான போட்டியும் இடம்பெற்றதுடன், சிங்களப் பாரம்பரிய உடையில் வசீகரமாகத் தோன்றிய இளம் பணியாளர்கள் ஆர்வத்துடன் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

இந்நிகழ்வின் இறுதியில் ஜனாதிபதி மற்றும் பாதுகாப்பு பிரதானிகளால் வெற்றியாளர்களுக்கு பெறுமதியான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டன.