இந்திய விமானப்படை தளபதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சருடன் சந்திப்பு

மே 02, 2023

இந்திய விமானப்படைத் தளபதி எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித பண்டார தென்னகோன் அவர்களை சந்தித்தார்.

இந்த சந்திப்பு கொழும்பில் உள்ள பாதுகாப்பு இராஜாங்க அமைச்சில் இன்று (மே 02) இடம்பெற்றது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சுக்கு வருகை தந்த இந்திய விமானப்படைத் தளபதி இராஜாங்க அமைச்சரினால் வரவேற்கப்பட்டதை தொடர்ந்து இருவருக்குமிடையில் சுமூகமான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

இந்தியா, இலங்கைக்கு வழங்கிய ஒத்துழைப்பு மற்றும் உதவிக்கு நன்றி தெரிவித்த இராஜாங்க அமைச்சர், பரஸ்பர நன்மை மற்றும் பிராந்திய பாதுகாப்பிற்காக நெருக்கமாக பணியாற்ற எதிர்பார்த்துள்ளதாகவும் தெரிவித்தார்.

எயார் சீப் மார்ஷல் வி.ஆர்.சௌதாரி அவர்கள், பாதுகாப்பு இராஜாங்க  அமைச்சரினால் வழங்கப்பட்ட வரவேற்புக்கு நன்றி தெரிவித்ததோடு, இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால பாதுகாப்பு ஒத்துழைப்பு தொடர வேண்டும் என்றும், இந்த விடயத்தில் தனது ஆதரவை வழங்குவதாகவும் தெரிவித்தார்.

மேலும், இந்த சந்திப்பினை நினைவு கூறும் வகையில் நினைவுச்சின்னங்களும் பரிமாறிக்கொள்ளப்பட்டன.

இந்த சந்திப்பில் கொழும்பிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூத் அவர்களும் கலந்துகொண்டார்.