நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் மழையுடனான காலநிலை எதிர்பார்க்கப்படுகிறது - வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவிப்பு

மே 04, 2023

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (மே 04) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இன்று காலை வெளியிடப்பட்ட வானிலை முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் வடமேல் மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, மன்னார், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் காலைவேளையில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

கிழக்கு, ஊவா, வடமத்திய மற்றும் வடமேல் மாகாணங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான கனமழை பெய்யக் கூடும் அதேவேளை, ஏனைய இடங்களில் சில இடங்களில் சுமார் 50 மில்லிமீற்றர் வரையில் ஓரளவு பலத்த மழை பெய்யக் கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், மேற்கு மற்றும் தெற்கு கரையோரப் பகுதிகளில் அவ்வப்போது மணிக்கு 40-50 கிமீ வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இதேவேளை, பதுளை, கேகாலை மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல பகுதிகளுக்கு தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் மண்சரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.