தேசிய வைத்தியசாலை ஊழியர்களுக்கு இலங்கை விமானப்படை அதிகாரிகளால் அவசரகால தயார்நிலை செயலமர்வு

மே 11, 2023

கொழும்பு தேசிய வைத்தியசாலை பணிப்பாளரின் வேண்டுகோளுக்கு இணங்க இலங்கை விமானப்படையின் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிபொருள் (CBRNE) பிரிவினால் அவசரகால தயார்நிலை தொடர்பான விசேட பயிற்சித் திட்டம் புதன்கிழமை (மே 10) கொழும்பில் உள்ள தேசிய வைத்தியசாலையில் நடத்தப்பட்டது.

இதன்போது திடீர் இரசாயன, உயிரியல், கதிரியக்க, அணு மற்றும் வெடிப்புத் தாக்குதல்கள் போன்ற அவசரகால நிலைமைகளை எதிர்கொள்ள வைத்தியசாலை ஊழியர்களை தயார்படுத்துவதும், உடனடி சிகிச்சை அளித்து நோயாளிகளை வான்வழி அல்லது தரைவழியாகக் குறுகிய காலத்தில் பாதுகாப்பாகக் கொண்டு செல்வதும் இச் செயலமர்வின் பிரதான நோக்கம் ஆகும் என இலங்கை விமானப்படை தெரிவிக்கின்றது.

இச் செயலமர்வானது தொழில்முறை அணுகுமுறையுடன் மேற்கொள்ளப்பட்டதுடன் அனைத்து பங்கேற்பாளர்களும் அவசரகால சூழ்நிலைகளைக் கையாளும்முறை தொடர்பான  பல முக்கிய அம்சங்களை பெற்றுக்கொள்வதற்கான ஒரு தனித்துவமான தளத்தை வழங்கியதாக இலங்கை விமானப்படை மேலும் தெரிவிக்கின்றது.