பாடசாலை மாணவர்களின் பாதுகாப்பிற்காக சமூகப் புலனாய்வுப் பிரிவை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளது - பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர்
மே 19, 2023- · நாட்டின் முனேற்றத்திக்காக இந்த காலாவதியான மாதிரியமைப்புக்களை நாம் மாற்றியமைக்க வேண்டும்
- · இளைஞர்களுக்கு ஆளுமை, நடைமுறை திறன், அறிவு மற்றும் தலைமைத்துவத்துடன் கூடிய பயிற்சிகள் வழங்கப்படவேண்டும்.
நாட்டில் அண்மைக்காலங்களில் அதிகரித்துவரும் சிறுவர் துஸ்பிரயோகங்கள் மற்றும் சட்டவிரோத சம்பவங்களில் இருந்து குறிப்பாக சிறுவர்களைப் பாதுகாப்பதற்கான சமூகப் புலனாய்வுப் பிரிவொன்றை அமைக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் தெரிவித்தார்.
நமது வருங்கால சந்ததியினருக்கான பாதுகாப்பு நடவடிக்கையாக அனைத்து பாடசாலைகளினதும் ஒத்துழைப்புடன் "சமூக புலனாய்வு பிரிவு" அமைக்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும், அது இன்னும் ஆரம்ப கட்ட கலந்துரையாடளில் இருப்பதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
களுத்துறை பொலிஸ் பயிற்சிக் கல்லூரியின் பொலிஸ் கெடட் பிரிவுக்கு நேற்று (18) விஜயம் செய்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனைத் தெரிவித்துள்ளார்.
பொலிஸ் கெடட் பிரிவின் பாடசாலை கெடட் பயிற்றுவிப்பாளர்களிடம் உரையாற்றிய அவர், தேசிய மாணவர் படையணியில் சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதுடன், அதன் செயற்பாடுகளை வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களுக்கு விரிவுபடுத்த வேண்டியதன் அவசியத்தையும் இதன்போது வலியுறுத்தினார்.
நாடு மாற்றத்தின் காலகட்டத்தை எதிர்நோக்கி வருவதாகவும், நாட்டின் ஒட்டுமொத்த அமைப்பை பலவீனப்படுத்தும் தற்போதுள்ள அமைப்பில் தரமான மாற்றத்திற்கும் மற்றும் அரச சேவையின் தரத்தை அதிகரிப்பதற்கும் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
புதிய பட்டதாரிகளின் ஆளுமை, நடைமுறை, அறிவு மற்றும் தலைமைப் பண்புகளை வளர்த்துக்கொள்வதன் முக்கியத்துவத்தை சுட்டிக்காட்டிய அவர், அனைத்து துறைகளிலும் சரியான நேரத்தில் சீர்திருத்தங்களின் அவசியத்தை மீண்டும் வலியுறுத்தினார்.
பொலிஸ் கெடட் பிரிவின் பணிப்பாளர் சி.எஸ்.பி.சிந்தக குணரத்னவின் அழைப்பின் பேரில் பொலிஸ் பயிற்சிப் பிரிவுக்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சருக்கு கல்லூரியின் நீண்டகால மரபுகளுக்கமைய கௌரவ மரியாதையுடன் சம்பிரதாயமான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்த விஜயத்தின் போது அவர் நிர்வாக வளாகம் மற்றும் புதிய கேட்போர் கூடத்தையும் பார்வையிட்டதுடன் அங்கு அவர் பாடசாலை கெடட் பயிற்றுவிப்பாளர்களின் மத்தியில் உரையாற்றினார்.
இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சரினால் மரக்கன்று ஒன்று நட்டிவைக்கப்பட்டதுடன் நிகழ்வைக் குறிக்கும் வகையில் இராஜாங்க அமைச்சருக்கு நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
கல்லூரி ஆரம்பிக்கப்பட்ட காலம் முதல் இன்று வரை தேசத்திற்காக ஆற்றி வரும் பணிகளைப் பாராட்டிய இராஜாங்க அமைச்சர், எதிர்கால சந்ததியினருக்கு பாதுகாப்பான எதிர்காலத்தை உருவாக்குவதற்கு அனைத்து பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஒன்றிணைந்து செயற்படுமாறு கேட்டுக் கொண்டார்.
தேசிய மாணவர் படையணியின் பணிப்பாளர் பிரிகேடியர் ஜி.எஸ்.பொன்சேகா, சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகள், பொலிஸ் கெடட் அதிகாரிகள், கெடட் பயிற்றுவிப்பாளர்கள் மற்றும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சின் அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.