14 ஆவது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு ஜனாதிபதியின்
பங்களிப்புடன் இடம்பெற்றது

மே 20, 2023
  • போர்வீரர்களின் தியாகங்களை நினைவுகூர்ந்து தேசத்தின் நன்றியை தெரிவித்துக் கொள்கிறது.

14வது தேசிய போர்வீரர் நினைவேந்தல் நிகழ்வு இன்று (மே 19) முப்படைகளின் தளபதி அதிமேதகு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அவர்களின் தலைமையில் கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் உள்ள தேசிய போர்வீரர் நினைவிடத்தில் நடைபெற்றது.

பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து நாட்டையும் அதன் மக்களையும் பாதுகாப்பதற்காக இலங்கை முப்படைகளின் போர் வீரர்களின் வீரத்தையும், அவர்களின் தன்னலமற்ற சேவையையும் கௌரவிக்கும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் மே 19 அன்று தேசிய போர்வீரர்கள் தினம் கொண்டாடப்படுகிறது.

தாய்நாட்டின் சுதந்திரம் மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாப்பதற்கும், அமைதி மற்றும் ஒற்றுமையின் சகாப்தத்தை ஏற்படுத்துவதற்கும் துணிச்சலான போர்வீரர்கள் செய்த உயர்ந்த தியாகங்களை நினைவுகூரும் இந்த தேசிய நிகழ்வு ஒவ்வொரு ஆண்டும் நினைவுகூரப்படுகிறது.

மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக உயிர்களையும் உடமைகளையும் அழித்து இந்நாட்டு மக்களுக்கு சொல்லொணாத் துயரத்தை ஏற்படுத்திய புலிப் பயங்கரவாதிகளை இலங்கையில் ஆயுதப் படைகள் தோற்கடித்து 2009 ஆம் ஆண்டு மே 18 ஆம் திகதி நாட்டில் அமைதியை நிலைநாட்டினர்.

இந்த நிகழ்வின் ஆரம்பத்தில் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த போர்வீரர்களை நினைவு கூர்ந்து ஒரு நிமிட மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

இராணுவ மரபுக்கு அமைவாக இடம்பெற்ற இந்த நிகழ்வின் போது ஜனாதிபதி விக்ரமசிங்க அவர்கள் போர் நினைவுத்தூபியில் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் போர்வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தினார். இதைத் தொடர்ந்து முக்கிய பிரமுகர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.

பயங்கரவாதத்தை தோற்கடிப்பதற்காக போரிட்ட வீரர்களின் சேவைகள் பாராட்டப்பட்டதுடன், உயிரிழந்த வீரர்களின் குடும்பத்தினர் உட்பட அங்கிருந்தவர்கள் போர்வீரர்களை பெருமையுடனும் நன்றியுடனும் நினைவு கூர்ந்தனர்.

போர்வீரர்கள் மற்றும் போர்வீரர்களின் குடும்பங்களின் நலனைக் கவனிக்கும் அரச நிறுவனமான ரணவிரு சேவா அதிகாரசபையின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன், தேசிய பாதுகாப்பு தொடர்பான ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் ஜனாதிபதி பணிக்குழாம் பிரதானியுமான சாகல ரத்நாயக்க, பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன, பாதுகாப்பு பதவி நிலைத் தலைமை அதிகாரி முப்படைகளின் தளபதிகள், பொலிஸ் மா அதிபர், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம், ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர், முப்படை , பொலிஸ் , அரச அதிகாரிகள் மற்றும் இராஜதந்திரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.