ஜப்பான் - இலங்கை நட்புறவு சங்கம் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு உபகரணங்களை நன்கொடையாக வழங்கியது

மே 23, 2023

ஜப்பான் இலங்கை நட்புறவுச் சங்கம் திங்கட்கிழமை (மே 22) நடைபெற்ற வைபவத்தில் இலங்கை விமானப்படைக்கு தீயணைப்பு வாகனம்  மற்றும் இரண்டு ஏணிகளையும் அன்பளிப்பு செய்துள்ளது.

மேலும், தூதுக்குழுவினர் விமானப்படை வீரர்களின் பாடசாலை மாணவர்களுக்கு 13 புலமைப்பரிசில்கள் மற்றும் வாசிப்பு கண்ணாடிகள் ஆகியவற்றை திரு. கோடோ ஹிடேகி அவர்களின் ஆதரவுடன் வழங்கிவைக்கப்பட்டதாக இலங்கை விமானப்படை தெரிவித்துள்ளது.

விமானப்படை தலைமையகத்தில் நடைபெற்ற விழாவின் போது, ஜப்பான்-இலங்கை நட்புறவு சங்கத்தின் தூதுக்குழுவினரால் இந்த நன்கொடை விமானப்படை தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் உதேனி ராஜபக்ஷவிடம் வழங்கப்பட்டது.

ஜப்பான்-இலங்கை நட்புறவுச் சங்கம் 2015ஆம் ஆண்டு முதல் 10 தீயணைப்பு வாகனங்கள், 08 ஆம்புலன்ஸ்கள், 03 திருப்பக்கூடிய ஏணி வாகனங்கள் மற்றும் ஒரு தீயணைப்பு கார் ஆகியவற்றை இலங்கை விமானப்படைக்கு வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

இந்தக் கையளிக்கும் நிகழ்வில் கோட்டோ ஹிடேக்கி, பிரதி தலைமை அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் ரொஷான் பியன்வில உள்ளிட்ட சிரேஷ்ட விமானப்படை அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.