தென் - மேற்கு பருவமழை ஆரம்பமாகும் வாய்ப்பு - வளிமண்டலவியல் திணைக்களம்
ஜூன் 05, 2023இலங்கை வளிமண்டலவியல் திணைக்களத்தின் முன்னறிவிப்புகளின்படி, நாடு முழுவதும் தென் - மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாக எதிர்வுகூறியுள்ளது.
இன்று (ஜூன் 05) காலை வெளியிடப்பட்ட முன்னறிவிப்பின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
சப்ரகமுவ மாகாணம் மற்றும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களில் சில இடங்களில் சுமார் 75 மில்லிமீற்றர் அளவில் ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வடமேல் மாகாணத்திலும் மழை பெய்யக் கூடும் எனவும் ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளையில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.
வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 40-45 கிலோ மீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இடியுடன் கூடிய மழையின் போது தற்காலிகமாக பலத்த காற்று மற்றும் மின்னலினால் ஏற்படக்கூடிய பாதிப்புகளை குறைத்துக்கொள்ள போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் அன்புடன் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.