பருவ மழை தொடங்கும் நிலையில் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

ஜூன் 06, 2023
  • தேசிய கட்டிட ஆராயிச்சி நிறுவனம் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
  • வளிமண்டலவியல் திணைக்களம் அதிக மழை பெய்யும் என எதிர்வுகூறியுள்ளதுடன், 4 கடற்படை நிவாரணக் குழுக்கள் மீட்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

நாடு பூராகவும் தென்மேற்கு பருவமழை படிப்படியாக நிலைபெற்று வருவதாலும், மழைவீழ்ச்சி அதிகரிப்பதாலும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) பதுளை, காலி மற்றும் களுத்துறை மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

மேலும், களுத்துறை மாவட்டத்தில் வலல்லாவிட்ட, புளத்சிங்கள மற்றும் அகலவத்தை பிரதேசங்களுக்கும், காலி மாவட்டத்தில் நெலுவ, எல்பிட்டிய மற்றும் நாகொட மற்றும் பதுளை மாவட்டத்தில் பசறை ஆகிய பிரதேசங்களுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மத்துகம பாலிந்தநுவர பிரதேச செயலாளர் பகுதிகளுக்கு 2ஆம் நிலை எச்சரிக்கையும் ஏனைய பிரதேசங்களுக்கு 1ஆம் நிலை எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால்  இன்று (ஜூன் 06) காலை வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

சப்ரகமுவ மாகாணத்திலும் காலி, மாத்தறை மற்றும் களுத்துறை மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை பெய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஊவா மற்றும் மத்திய மாகாணங்களிலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.

அத்துடன், வடக்கு மற்றும் வடமத்திய மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை, புத்தளம் மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு (40-45) கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.

இதேவேளை, மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவுவதற்காக கடற்படை நான்கு (04) நிவாரணக் குழுக்களை புலத்சிங்கள, பதுரலிய, லத்பந்துர மற்றும் கலவான பிரதேசங்களுக்கு அனுப்பியுள்ளதாக இலங்கை கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் க.பொ.த. சாதாரண தர பரீட்சை எழுதும்  மாணவர்களை ஏற்றிச் செல்ல படகுச் சேவையையும் இலங்கை கடற்படையினரால்  ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.