கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில்
மூலோபாய மதிப்பீட்டிற்கான மையம் நிறுவப்பட்டது

ஜூன் 08, 2023

ஜெனரல் சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீடம் அமெரிக்காவின் பாதுகாப்பு ஆளுமைக்கான நிறுவனத்தின் ஒத்துழைப்புடன்  மூலோபாய மதிப்பீட்டு மையமொன்றினை செவ்வாய்கிழமை (ஜூன் 06, 2023) ஆரம்பித்துள்ளது.

இதன் தொடக்க நாளில் மூலோபாய மதிப்பீட்டு மையத்தினால் ஆரம்ப செயலமர்வு பாதுகாப்பு மற்றும் மூலோபாய ஆய்வுகள் பீட நிர்வாகக் குழு மண்டபத்தில்  நடத்தப்பட்டது.

இந்த செயலமர்வில், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் கலந்து சிறப்பித்தார்.

மூலோபாய மதிப்பீட்டு மையத்தின் இயக்குனராக கலாநிதி ஹரிந்த விதானகே அவர்கள் செயல்படுகிறார். கலாநிதி சனத் டி சில்வா, மூலோபாயக் கற்கைகள் திணைக்களத்தின் ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் ஆராய்ச்சி அதிகாரியின் ஒத்துழைப்புடன், திட்ட முகாமையாளராகவும் பணியாற்றுகிறார்.

அத்துடன், மேற்படி மையமானது பாதுகாப்பு அமைச்சின்  தேசிய பாதுகாப்பு ஆய்வுகள் நிறுவனத்தின் மூன்று ஆராய்ச்சி அதிகாரிகளின் மூலம் பாதுகாப்பு அமைச்சுடன் இணைக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

மேற்படி, மூலோபாய மதிப்பீட்டு மையத்தினை நிறுவுவதன் முக்கிய நோக்கமானது, இலங்கையில் கொள்கை உருவாக்கத்திற்கான ஒரு மையமாக செயல்படுவதற்காக ஆகும்.

வல்லுநர்கள், கொள்கை வகுப்பாளர்கள் மற்றும் பங்குதாரர்களின் ஒத்துழைப்புடன்  பல்வேறு கொள்கை சிக்கல்களில் மதிப்பீடு மற்றும் பகுப்பாய்வு வழங்கும் போது, இம் மையமானது  மூலோபாய ரீதியில் முடிவெடுப்பதை மேம்படுத்தும் என பாதுகாப்பு பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

பிரதி உபவேந்தர் (பாதுகாப்பு மற்றும் நிர்வாகம்) பிரிகேடியர் டி.சி.ஏ விக்கிரமசிங்க செயலமர்வில் ஆரம்ப உரையை நிகழ்த்தினார்.

இந்த செயலமர்வில், ஐஎஸ்ஜியின் பிரதிநிதிகள், கலாநிதி ஆஸ்கார் டி சொட்டோ, கலாநிதி பரக் சல்மொனி, மெக்ஸ் கெல்லி, மாட் அஷ்லே, பீடாதிபதிகள், திணைக்களத் தலைவர்கள், ஆராய்ச்சி ஒருங்கிணைப்பாளர் மற்றும் கல்விப் பணியாளர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.