தேசிய கட்டிட ஆராயிச்சி நிறுவனம் இலங்கையின் பல பகுதிகளுக்கு மண்சரிவு எச்சரிக்கைகளை விடுத்துள்ளது

ஜூன் 13, 2023

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) கேகாலை மாவட்டத்தில் தெரணியகல, எட்டியாந்தோட்ட, தெஹியோவிட்ட பிரதேசங்களுக்கும் இரத்தினபுரி மாவட்டத்தில் நிவித்திகல மற்றும் கலவான பிரதேசங்களுக்கும் 2ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையை விடுத்துள்ளது.

அதேபோன்று, கொழும்பு, களுத்துறை, கேகாலை மற்றும் இரத்தினபுரி மாவட்டங்களில், குறிப்பாக மேற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் பரவலாக மழை பெய்யும் என்ற வானிலை முன்னறிவிப்புகளுடன் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் 1ஆம் நிலை மண்சரிவு எச்சரிக்கையும் விடுத்துள்ளது.

வளிமண்டலவியல் திணைக்களத்தினால் இன்று (ஜூன் 13) காலை வெளியிடப்பட்ட முன்னறிவிப்புகளின்படி, மேல் மற்றும் சப்ரகமுவ மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதுடன், இந்தப் பிரதேசங்களில் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்.

வடமேல் மற்றும் மத்திய மாகாணங்களிலும் மழை பெய்யும் அதேவேளை ஊவா மாகாணத்திலும் அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுகின்றது.

இதேவேளை, மத்திய மலைப்பகுதிகளின் மேற்கு சரிவுகளில் மணிக்கு 40-45 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்றும் வீசக்கூடும்.