உலகின் மிகப்பெரிய சிறுநீரகக் கல்லை அகற்றி கின்னஸ் சாதனை படைத்த இராணுவ மருத்துவர்கள்

ஜூன் 14, 2023

உலகின் மிகப் பெரிய மற்றும் நீளமான சிறுநீரகக் கல்லை (கல்குலி) அறுவை சிகிச்சை மூலம் அகற்றும் பணி வியாழக்கிழமை (ஜூன் 1) கொழும்பு இராணுவ மருத்துவமனையில் இடம் பெற்றது. இது கின்னஸ் உலக சாதனையில் இடம்பிடித்தது. கொழும்பு இராணுவ வைத்தியசாலையின் சிறுநீரக பிரிவின் தலைவர் சிறுநீரக மருத்துவ நிபுணர் லெப்டினன் கேணல் (வைத்தியர்) கே. சுதர்ஷன், கெப்டன் (வைத்தியர்) டபிள்யூபீஎஸ்சி பத்திரத்ன மற்றும் வைத்தியர் தமாஷா பிரேமதிலக ஆகியோருடன் சத்திரசிகிச்சையில் முன்னெடுத்தார். கேணல் (வைத்தியர்) யூஏஎல்டீ பெரேரா மற்றும் கேணல் (வைத்தியர்) சிஎஸ் அபேசிங்க ஆகியோரும் அறுவை சிகிச்சையின் போது மயக்க மருந்து நிபுணர்களாக உதவினர்.

கொழும்பு இராணுவ மருத்துவமனையில் வியாழக்கிழமை (1) இராணுவ வைத்தியர்களால் அகற்றப்பட்ட கல் 13.37 செ.மீ நீளமும் 800 கிராம் எடையும் கொண்டது. கின்னஸ் சாதனையின் படி, உலகில் இதுவரை மிகப்பெரிய சிறுநீரகக் கல்லாக (இந்தியா) 13 சென்டிமீட்டர் நீளமும், அதிகூடிய நிறை கொண்ட சிறுநீரகக் கல்லாக (பாகிஸ்தான்) 620 கிராம் எடையும் கொண்டதாக காணப்பட்டுள்ளது.

Courtesy - www.army.lk