கதிர்காம பாத யாத்திரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பங்கேற்பு
ஜூன் 16, 2023யாழ்ப்பாணத்திலிருந்து ஆரம்பிக்கும் இலங்கையின் பாரம்பரிய கதிர்காமம் பாத யாத்திரையில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் ஐந்தாவது தடவையாக கடந்த ஞாயிறன்று (ஜூன் 11 ) கலந்துகொண்டார்.
கதிர்காமப் பெருமானுக்கு நடத்தப்படும் இந்த பாரம்பரிய பாத யாத்திரையில் கலந்து கொண்ட இலங்கை மற்றும் தென்னிந்தியாவைச் சேர்ந்த பக்தர்கள் சுமார் இரண்டு மாதங்கள் யால தேசிய பூங்கா ஊடாக நூற்றுக்கணக்கான கிலோமீற்றர்களைக் கடந்து கதிர்காம விகாரையை எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (25) சென்றடையவுள்ளார்கள்.
இந்த யாத்திரையில் இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் கெப்டன் விகாஸ் சூட் அவர்களும் இராஜாங்க அமைச்சருடன் கலந்துகொண்டார்.
இப்பாரம்பரிய பாத யாத்திரை இலங்கையின் பல்கலாச்சார பண்பாட்டின் ஒரு அங்கமாக கருதப்படுவதுடன், பாத யாத்திரை ஆரம்பித்து முன்செல்லும் வழியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் இதனுடன் இணைவது இதன் ஒரு தனி சிறப்பம்சமாகும்.
பாத யாத்திரையில் பங்குபற்றும் பக்தர்களுக்காக இராஜாங்க அமைச்சரின் ஏற்பாட்டில் யால சரணாலயத்தில் ‘லிங் துன’ பகுதியில் குளிர்பான குடிக்கும் வசதிகள் ஒன்றும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இப்புனித யாத்திரையில் பங்கேற்கும் பக்தர்களின் பாதுகாப்பு மற்றும் நலன்புரி வசதிகள் முப்படையினர், பொலிஸார் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் ஏற்பாட்டில் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது.
இப் பாதயாத்திரையை சிறப்பாக நடத்துவதற்கு பங்களிப்பை வழங்கும் முப்படை, பொலிஸ் மற்றும் வனவிலங்கு திணைக்கள அதிகாரிகள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தனது நன்றியை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.