--> -->

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகமானது எதிர்கால உயர் கல்வியின் தேவைகளைப் பூர்த்தி செய்ய ஒரு சிறந்த கல்வி நிறுவனமாக விளங்குகிறது

ஜூன் 23, 2023
  • கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் புதிய உள்கட்டமைப்பு வசதிகள் பாதுகாப்பு செயலாளரினால் திறந்து வைப்பு
  • பழைய மாணவர்களின் நினைவாக ‘Hall of Fame’ கட்டிடம் திறந்து வைப்பு

கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகம் அதன் தொடக்கத்தில் இருந்து புகழ்பெற்ற பல்கலைக்கழகமாக மாறியுள்ளதுடன், கல்வி மற்றும் ஆராய்ச்சியில் சிறந்து விளங்குவதைத் தொடர்ந்து முன்னெடுத்துச் சென்றுள்ளது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் புதிதாக நிர்மாணிக்கப்பட்ட கட்டடங்களின் திறப்பு விழாவில் பிரதம அதிதியாக இன்று (ஜூன் 23) கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து உரையாற்றிய ஜெனரல் குணரத்ன அவர்கள் உள்ளூர் மற்றும் சர்வதேச தரவரிசையில் மேலும் உயர் நிலைக்கு கொண்டுவந்த இப் பல்கலைக்கழகத்தின் உப வேந்தர் மற்றும் கல்வி நிர்வாக ஊழியர்களின் சேவைகளை பாராட்டினார்.

கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழக நிர்வாக சபையின் தற்போதைய தலைவராக ஜெனரல் குணரத்ன அவர்கள் செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை பல்கலைக்கழகத்தின் வேந்தர் ஜெனரல் சாந்த கோட்டேகொட (ஓய்வு) மற்றும் உபவேந்தர் மேஜர் ஜெனரல் மிலிந்த பீரிஸ் ஆகியோர் வரவேற்றனர்.

புதிதாக திறந்து வைக்கப்பட்ட வசதிகளில் வேரஹெர 'சோமாதேவி' மகளிர் விடுதி வளாகம் மற்றும் ரத்மலானை கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் சட்டம், முகாமைத்துவம், சமூக விஞ்ஞானம் பீடங்கள் மற்றும் தலைமையக வளாகம் உள்ளிட்ட பல கட்டிடங்களும் அடங்கும்.

பாதுகாப்பு துறை மற்றும் பொது சேவைக்கு அளப்பரிய பங்களிப்பை வழங்கிய கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் பழைய மாணவர்களின் சேவைகளை நினைவுபடுத்துவதற்காக பாதுகாப்பு செயலாளரினால் ‘Hall of Fame’ நினைவுக் கட்டடமும் இதன் போது திறந்து வைக்கப்பட்டது ஒரு சிறப்பு அம்சமாகும்.

நிலம், கடல் மற்றும் வான் பாதுகாப்பு ஆகிய அத்தியாவசிய கூறுகளை உள்ளடக்கிய சுதந்திரத்திற்குப் பின்னரான இலங்கையின் பாதுகாப்புக் கொள்கை என்ற புத்தகத்தின் வெளியீட்டு விழாவும் இதன்போது இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.

மேலும், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கேட்போர் கூடத்தில் இடம்பெற்ற முவைப்பு நிகழ்வொன்றின் போது பல்கலைக்கழகம் இதுவரையில் அடைந்த வளர்ச்சி மற்றும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் தொடர்பாக விளக்கமளிக்கப்பட்டது.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன, இலங்கை இராணுவத்தின் பிரதம அதிகாரி மேஜர் ஜெனரல் சி.டி.வீரசூரிய, பொலிஸ் மா அதிபர் சி.டி. விக்கிரமரத்ன, சிரேஷ்ட அரச மற்றும் இராணுவ அதிகாரிகள், கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் கல்விசார் மற்றும் நிர்வாக ஊழியர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.