தேசிய அவசரகால செயல்பாட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்யும் நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பங்குதாரர்களுடன் சந்திப்பு

ஜூன் 23, 2023

2023-2028 ஆம் ஆண்டுக்கான தேசிய அவசரகால செயற்பாட்டுத் திட்டத்தை அபிவிருத்தி செய்வதற்கான செயலமர்வு இன்று (ஜூன் 23) கொழும்பு கலதாரி ஹோட்டலில் இடம்பெற்றது.

இந்த நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் கலந்துகொண்டார்.

அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த செயலமர்வில் சர்வதேச நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் ஏனைய பங்குதாரர்கள் கலந்து கொண்டனர்.

இந்த செயலமர்வில் ஐ.நா முகவர்கள், சர்வதேச பங்காளிகள், அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள், அரச மற்றும் தனியார் துறை அதிகாரிகள், முப்படைகள், பொலிஸ் மற்றும் தீயணைப்பு படை பணியாளர்கள், அனர்த்த முகாமைத்துவ நிலைய அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அனைத்து முரண்பாடுகளையும் எதிர்கொண்டு எமது சக குடிமக்களின் உயிர்களையும் நல்வாழ்வையும் பாதுகாப்பதற்கான அர்ப்பணிப்பு இந்த செயலமர்வில் கலந்துகொண்ட பங்குதாரர்களால் நிரூபிக்கப்பட்டுள்ளதாக செயலமர்வில் உரையாற்றிய பதில் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்தார்.

மேலும், வெள்ளம், மண்சரிவு மற்றும் வறட்சி உள்ளிட்ட இயற்கை அனர்த்தங்களினால் இலங்கை பாதிப்படைய இருப்பதால், எதிர்காலத்தில் அதனை எதிர்கொள்ளவேண்டிய அனர்த்த முகாமைத்துவ முன்னெச்சரிக்கை மற்றும் முகாமைத்துவ நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமானதாகும் என அமைச்சர் தெரிவித்தார்.

"நாம் தற்போது பின்பற்றும் நடைமுறைகள் ஒரு மூலோபாய செயல் திட்டங்களின் அடிப்படையில் தொலைநோக்கு இலக்குகளுடன் புதுப்பிக்கப்பட வேண்டும்" என்று அவர் மேலும் தெரிவித்ததார்.

அனர்த்தங்களினால் ஏற்படும் தாக்கத்தை திறம்பட தணிக்க எந்தவொரு தனி நிறுவனமும் சவால்களை எதிர்கொள்ள முடியாது. அனைத்து பங்குதாரர்களையும் ஒன்று சேர்த்து, அரசாங்க நிறுவனங்கள், சர்வதேச நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள், தனியார் துறை மற்றும் சமூகத்தின் ஒருங்கிணைந்த முயற்சிகளின் மூலம் மட்டுமே நம் மக்களைப் பெரியதாக பாதுகாக்க முடியும்.

இந்நிகழ்வில், அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க வரவேற்புரையையும் ஆரம்ப உரையையும் நிகழ்த்தினார்.

வளிமண்டலவியல் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.அதுல கருணாநாயக்க, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனத்தின் பணிப்பாளர் நாயகம் திரு.ஆசிறி கருணாவர்தன, பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் திரு.ஹர்ஷ விதானாராச்சி மற்றும் அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் செயற்பாட்டுப் பணிப்பாளர் பிரிகேடியர் அனில் பெரேரா ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.