தேசிய தொழில் கண்காட்சி நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் பங்கேற்பு

ஜூன் 25, 2023
  • முப்படையினரின் காட்சிக்கூடங்ளை அமைச்சர் பாராட்டினார்
  • இளைஞர்களின் எண்ணங்கள் மற்றும் அணுகுமுறைகளும் சிறப்பாக மாற்றமடைய  வேண்டும்

பண்டாரநாயக்க சர்வதேச ஞாபகார்த்த மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற தேசிய கைத்தொழில் கண்காட்சியின் இறுதி நாள் நிகழ்வில் பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்கள் இன்று (ஜூன் 25) கலந்து கொண்டார்.

சுமார் நான்கு நாட்களாக நடைபெற்ற இக்கண்காட்சிக்கு பங்களித்த முப்படையினர்க்கும் அதனுடன் தொடர்புடைய நிறுவனங்களுக்கும் அமைச்சர் தனது பாராட்டை தெரிவித்துள்ளார்.

உள்ளுர் கைத்தொழில் கலாசாரத்தை உருவாக்கும் நோக்கில் கைத்தொழில் அமைச்சும் இலங்கை கைத்தொழில் அபிவிருத்தி சபையும் இணைந்து ஏற்பாடு செய்த இந்த மாபெரும் கண்காட்சி ஜூன் 22ஆம் திகதி முதல் 25ஆம் திகதி வரை பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டப வளாகத்தில் நடைபெற்றது.

இந்த கண்காட்சியில், வரலாற்றில் முதன்முறையாக 21 தொழிற்துறைகளை பிரதிநிதித்துவப்படுத்தி சுமார் 750 கூடங்கள் அமைக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்வில் அமைச்சர் தென்னகோன் உரையாற்றுகையில், முப்பத்திரண்டு வருடகால யுத்தத்தின் போது போருக்குத் தேவையான எந்த வெடிமருந்துகளையும் நம் நாட்டில் தயாரிக்க முடியவில்லை. ஆனால் தற்போது பாதுகாப்புப் படையினருக்குத் தேவையான வெடிமருந்துகளை கடந்த ஆண்டு முதல் தயாரிக்கத் தொடங்கியுள்ளோம் என்றார்.

இலங்கை இராணுவ மின் மற்றும் இயந்திர பொறியியல் படை பாதுகாப்புப் படையினரின் தேவைக்கேற்ப வாகனங்களை நவீனமயமாக்கி பெறுமதி சேர்த்து வருகிறது இதன் மூலம், எமது நாட்டிற்கு பெருமளவிலான அந்நியச் செலாவணியைச் சேமிக்க முடிந்துள்ளதாகவும் இன்றைய இளைஞர்களின் எண்ணங்களும் அணுகுமுறைகளும் சிறந்ததாக மாற்றப்பட வேண்டும் எனவும் பதில் பாதுகாப்பு அமைச்சர் மேலும் சுட்டிக்காட்டினார்.

இந்நிகழ்வில் அமைச்சர்கள், அரச உயர் அதிகாரிகள், அதிதிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.