ஓய்வுபெறும் விமானப்படைத் தளபதி பாதுகாப்பு செயலாளரைச் சந்தித்தார்
ஜூன் 29, 2023ஓய்வுபெறவுள்ள விமானப்படைத் தளபதி எயார் மார்ஷல் சுதர்சன பத்திரன நேற்று (ஜூன் 28) பாதுகாப்பு அமைச்சில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை சந்தித்தார்.
இலங்கை விமானப்படையில் 38 வருட சேவையை நிறைவு செய்த விமானப்படை தளபதி எயார் மார்ஷல் பத்திரனவின் ஓய்வு நாளை முன்னிட்டு பாதுகாப்பு அமைச்சின் ஏற்பாட்டில் இன்று இடம்பெற்ற நினைவு நிகழ்வில் கருத்து வெளியிட்ட பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன மூன்று தசாப்தங்களாக நாட்டில் பயங்கரவாதத்தை ஒழித்து மனிதாபிமான நடவடிக்கைக்கு விமானப்படைக்கு தலைமை தாங்கி, நாட்டில் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை முன்னெடுத்து பாதுகாப்பான நாட்டை கட்டியெழுப்புவதில் எயார் மார்ஷல் பத்திரன சிறப்பாக செயற்பட்டார் என்று மேலும் தெரிவித்தார்.
இலங்கை விமானப்படையின் 18வது தளபதியாக எயார் மார்ஷல் சுதர்சன் பத்திரன 2020 நவம்பர் 02ஆம் திகதி பதவியேற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
1965 டிசம்பர் 30ஆம் திகதி பிறந்த அவர், புகழ்பெற்ற கண்டி தர்மராஜா கல்லூரியில் தனது கல்வியை முடித்து, 1985 ஜூலை 02ஆம் திகதி இலங்கை விமானப்படையில் ஒரு கெடட் அதிகாரியாக இணைந்து பைலட் அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.
ஒரு கண்காணிப்பு விமானியாக தனது செயல்பாட்டு பணியினை ஆரம்பித்த அவர், பின்னர் ஒரு இலகுரக போக்குவரத்து விமானியாக பணியாற்றினார், பின்னர் இலங்கை விமானப்படையில் சூப்பர்சோனிக் போர் விமானங்களை பறக்கவிடுவதில் போர் ஜெட் விமானியாக தனது பணியை ஆரம்பித்தார்.
மேலும், ஒரு விமானப் பயிற்றுவிப்பாளர் மற்றும் விமான ஆய்வாளரான அவர் கபிர் மற்றும் எப்-7 ரக போர் விமானங்கள் உட்பட 10க்கும் அதிகமான விமானங்களை ஓட்டுவதில் தகுதி பெற்றுள்ளார். அத்துடன், 3,500க்கும் அதிகமான மணிநேரங்களை விமானியாக பறக்கும் நேரங்களை பதிவு செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
எயார் மார்ஷல் பத்திரன தனது சிறப்புமிக்க சேவைக்காக "விசிஷ்ட சேவா விபூஷன்" மற்றும் "உத்தம சேவாப் பதக்கம்", மனிதாபிமான நடவடிக்கைகளில் அவரது உன்னத மற்றும் தன்னலமற்ற பங்களிப்புக்காக இரண்டு முறை வீர விக்ரம விபூஷன் மற்றும் இரண்டு முறை போர் விக்ரம பதக்கம், நான்கு முறைகள் ரணசூர பதக்கம் உட்பட எட்டு முறை வீர பதக்கங்கள் ஆகியவை அவருக்கு வழங்கப்பட்டுள்ளன.
ஓய்வுபெற்று செல்லும் விமானப்படைத் தளபதியின் எதிர்கால முயற்சிகளுக்கு பாதுகாப்புச் செயலாளரினால் வாழ்த்துக்கள் தெரிவிக்கப்பட்டதுடன் இந்நிகழ்வை நினைவு கூறும் வகையில் விமானப்படைத் தளபதிக்கு நினைவுப் பரிசும் வழங்கி வைக்கப்பட்டது.
மேலும், பாதுகாப்பு அமைச்சின் சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சித்ராணி குணரத்ன அவர்களினால் விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி. சாமினி பத்திரனவுக்கு விசேட நினைவுச் சின்னமும் வழங்கி வைக்கப்பட்டது.
விமானப்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சாமினி பத்திரனவின் உன்னதமான சேவைகளையும் பங்களிப்புகளையும் பாதுகாப்புச் செயலாளர் பாராட்டினார்.
இந்த நிகழ்வில் உரையாற்றிய ஓய்வுபெற்ற விமானப்படைத் தளபதி, தனது கடமைகளை சரியான முறையில் நிறைவேற்றுவதற்கு தமக்கு வழங்கிய நட்புரீதியான ஆதரவு மற்றும் பாதுகாப்பு அமைச்சு மற்றும் இலங்கை விமானப்படை தலைமையகத்திற்கும் இடையிலான பிணைப்பை வலுப்படுத்த பாதுகாப்பு அமைச்சு வழங்கிய ஒத்துளைப்புக்காகவும் தனது நன்றியைத் தெரிவித்தார்.
மேலும், விமானப்படை தளபதி பாதுகாப்பு செயலாளர், சிரேஷ்ட இராணுவ அதிகாரிகள் மற்றும் வருகைதந்த அனைத்து விருந்தினர்களுக்கும் இதன்போது தனது நன்றியைத் தெரிவித்தார்.
இந்நிகழ்வுக்கு பாதுகாப்புப் படைகளின் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே மற்றும் இராணுவ சேவை வனிதா பிரிவின் தலைவி ஜானகி லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா மற்றும் கடற்படை சேவை வனிதா பிரிவின் தலைவி மாலா லமாஹேவா, பாதுகாப்பு அமைச்சின் கீழ் உள்ள நிறுவனங்களின் தலைவர்கள்/பணிப்பாளர்கள், பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.