நீர்கொழும்பு சம்பவத்தை விசாரிக்க நான்கு பொலிஸ் குழுக்கள் நியமனம்
மே 07, 2019நீர்கொழும்பு கொச்சிக்கடையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். இரண்டு நபர்களுக்கிடையில் ஏற்பட்ட ஒரு தனிப்பட்ட விவகாரம் தொடர்பான விவாதத்தின்போது கூடுதலான மதுபானம் அருந்தியிருந்த மற்றுமொறு குழுவினர் சம்பவத்தில் தலையீடு செய்தனர். இந்தத் தலையீட்டை அடுத்து நீர்கொழும்பில் அமைதியற்ற நிலை ஏற்பட்டது. எனினும் பொலிஸார் விரைவாக செயற்பட்டு நிலைமை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்து அமைதியை ஏற்படுத்திதாகவும் குறித்த பகுதியில் பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டதாகவும் மேலும் அங்கு இடம்பெற்ற வன்முறை தொடர்பில் விசாரணை செய்வதற்காக 4 பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பொலிஸ் அத்தியட்சகர் ருவன் குணசேகர தெரிவித்தார்.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களுடன் தொடர்புபட்ட பயங்கரவாத குழுவினருக்குச் சொந்தமான 140 மில்லியன் ரூபாய் பெறுமதியான பணத்தினை குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர். இவ்வாறு கண்டுப்பிடித்துள்ள பணத்தின் ஒரு தொகையை மீட்டெடுத்துள்ள அதேசமயம், மிகுதி ஒரு தொகை பணம் வங்கிக் கணக்குகளில் வைப்பிலிடப்பட்டுள்ளது. மேலும், அவர்கள் 7 பில்லியன் ரூபாய் பெறுமதியான சொத்துக்களையும் கண்டுபிடித்துள்ளனர். வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ள கணக்குகளை முடக்குவதற்கும் கைப்பற்றப்பட்டுள்ள சொத்துக்களை முடக்குவதற்கும் தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இந்தச் சம்பவத்துடன் தொடர்புபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் 73 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸார் (CID) மற்றும் பயங்கரவாத தடுப்புப் பிரிவு பொலிஸாரினால் (TID) தொடர்ந்தும் தடுத்து வைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர். இவர்களில் ஏழு பெண்கள் உட்பட 54 பேர் குற்றப் புலனாய்வு திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழும் இரண்டு பெண்கள் உட்பட 19 பேர் பயங்கரவாத திணைக்கள பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழும் விசாரிக்கப்பட்டு வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
நாடளாவிய ரீதியில் பாடசாலைகளின் பாதுகாப்பினை உறுதிப்படுத்துவதற்காக முப்படை மற்றும் போலீசார் ஆகியோர் தேடுதல் நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளனர். வாகனங்களில் தமது பிள்ளைகளை கொண்டு வரும் பெற்றோர், சிரமங்களைத் தவிர்ப்பதற்காக தமது பிள்ளைகளை பாடசாலை வாயில்களில் விட்டுவிட்டு விரைவாக வெளியேறுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றார்கள்.
மேலும் இலங்கை கடற்படையினர் 14 தண்ணீர் ஜெல் குச்சிகள், 26 டெட்டனேட்டர்கள் ஆகியவற்றை இறக்கக்கண்டி பிரதேசத்தில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையின் போது கைப்பற்றினர். குறித்த பொருட்கள் சட்டவிரோத மீன்பிடிக்காக பயன்படுத்தும் நோக்கில் வைக்கப்பட்டிருந்ததாக நம்பப்படுகிறது.