--> -->

சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் –
பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்

ஜூலை 06, 2023

இந்து சமுத்திரத்தின் ஊடாக இடம்பெறும் சட்டவிரோத மனிதக் குடிபெயர்வு மற்றும் போதைப்பொருள் கடத்தலைத் தடுக்க கடுமையான சட்டம் முன்னெடுப்பதாக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன் தெரிவித்தார்.

இந்நாட்களில் நிலவும் சீரற்ற காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அனர்த்த நிவாரணங்களை வழங்குவதில் தற்போதுள்ள சுற்றறிக்கைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.

ஜனாதிபதி ஊடக மையத்தில் இன்று (06) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக மாநாட்டில் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் இதனைத் தெரிவித்தார்.

அங்கு கருத்துத் தெரிவித்த பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித பண்டார தென்னகோன்,

“இந்து சமுத்திரத்தின் பாதுகாப்பு தொடர்பில் இந்தியாவும் இலங்கையும் கவனம் செலுத்தி வருகின்றன. நமது பிராந்தியத்தின் கடல்சார் பாதுகாப்பில் கடற்படை பொறுப்புடன் பாரிய பங்களிப்பை ஆற்றிவருகின்றது.

ஒவ்வொரு ஆண்டும், எதிர்வரும் ஐந்து ஆண்டுகள் தொடர்பில் நாட்டின் பாதுகாப்பு குறித்த மதிப்பீட்டு அறிக்கையொன்றைப் தயாரிக்கப்படுறது. இதன்போது பயங்கரவாதம், தீவிரவாதம், சட்டவிரோத நடவடிக்கைகள், புவிசார் அரசியல் குற்றங்கள் ஆகியவை தொடர்பில் இந்த மதிப்பீட்டில் உள்ளடக்கப்படுகின்றன.

இந்த மதிப்பீட்டின்படியே, ஒரு நாடாக நாட்டின் பாதுகாப்பு குறித்து நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. தீர்மானங்கள் எடுக்கும்போது இந்த மதிப்பீடுகள் கவனத்தில் எடுத்துக்கொள்ளப்படுகின்றன.

முக்கியமாக, சட்டத்தின் ஆட்சி நாட்டின் பொருளாதார ஸ்திரத்தன்மையை பேணுவதில் தாக்கம் செலுத்துகிறது. எனவே, சட்டத்தின் ஆட்சியை நிலைநாட்டாத எந்த நாட்டிலும் முன்னேற்றத்தை எதிர்பார்க்க முடியாது.

இந்நாட்களில் நிலவும் மோசமான வானிலையால் 11 மாவட்டங்களில் உள்ள 594 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 2247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அனர்த்த முகாமைத்துவப் பிரிவுடன் இணைந்து அவர்களுக்கான நிவாரணப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

அனர்த்த நிவாரணங்களை வழங்குவதில் தற்போதுள்ள சுற்றறிக்கைகளை தவறாக பயன்படுத்துவதை தடுக்க தேவையான திருத்தங்கள் மேற்கொள்ளப்பட வேண்டும் என அவதானிக்கப்பட்டுள்ளது. எனவே, அவற்றை விரைவில் திருத்த வேண்டும். 2016 மற்றும் 2021 க்கு இடையில், அனர்த்தங்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க அரசாங்கம் 60 பில்லியன் செலவிட்டுள்ளது.

மேலும், சிவில் பாதுகாப்புத் திணைக்களத்தில் 33,000 உறுப்பினர்கள் பணியாற்றுகின்றனர். அதில் யானை வேலிகளைப் பாதுகாக்க ஏராளமானோர் குவிக்கப்பட்டுள்ளனர். அத்துடன், காட்டு யானைகளிடமிருந்து மக்களைப் பாதுகாப்பதற்காக யானை வேலிகளை அமைக்க 10 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. ஆறாயிரம் யானைகளிடம் இருந்து மக்களை பாதுகாக்க சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் பத்தாயிரம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

தென் பகுதியைப் போன்று வடக்கு, கிழக்கிலும் தேசிய மாணவர் படையணிக்கு 20% உறுப்பினர்களை இணைப்பது மற்றும் சமூக பாதுகாப்புக்காக அவர்களை ஈடுபடுத்துவது குறித்தும் கவனம் செலுத்தப்பட்டுள்ளது. இதனையடுத்து ஒவ்வொரு பகுதியிலும் சமூக புலனாய்வு பிரிவாக அவர்களை பணியமர்த்துவதற்கான பிரிவுகளை நிறுவுவதில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளது.

கடந்த காலங்களில் கோரிக்கைகளை முன்வைத்து பல்வேறு நிறுவனங்கள் மற்றும் சேவைகள் சார்பாக பாதுகாப்புப் படை உறுப்பினர்களை பல்வேறு நடவடிக்கைகளுக்குப் பயன்படுத்தினார்கள். ஆனால் எதிர்காலத்தில் அத்தியாவசிய பணிகளுக்கு மாத்திரம் பாதுகாப்புப் படையினரை பணியமர்த்த நடவடிக்கை எடுப்பதன் மூலம் பாதுகாப்புப் படையினரின் கௌரவத்தைப் பாதுகாக்க முடியும். அதற்காக உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

அடிப்படைவாத அரசியல் கட்சியின் குழுவொன்று வடக்கில் மதஸ்தலங்களை குறிவைத்து தேவையற்ற விடயங்களை செய்து வருகின்றது. ஆனால் அவை ஒரு நாட்டில் இடம்பெறக்கூடாத விடயங்கள். வடக்கு கிழக்கில் காணிகளை வழங்கும் போது யாரையும் மகிழ்விக்கும் நோக்கில் காணி வழங்கப்படுவதில்லை. அவை அவற்றின் உண்மையான உரிமையாளர்களுக்கு வழங்கப்படுகின்றன.

இது தொடர்பாக வெளிப்படைத்தன்மையுடன் செயல்பட அரசாங்கம் ஒரு குழுவையும் நியமித்துள்ளது. இதுவரை வடக்கில் 80% வீதமான காணிகள் மீண்டும் மக்களிடம் கையளிக்கப்பட்டுள்ளன. யாரையும் மகிழ்விப்பதற்காக இராணுவ முகாம்கள் அகற்றப்படுவதில்லை. ஆனால் ஒரு அரசாங்கம் என்ற வகையில் முறையான விசாரணைக்குப் பின்னரே இறுதி முடிவுகள் எடுக்கப்படுகின்றன.

பல்வேறு குழுக்கள் அன்றும் இன்றும் நாட்டை சீர்குலைக்க முயற்சிக்கின்றன. இதுபோன்ற சூழ்நிலைகளைத் தடுக்க பாதுகாப்புப் படைகள் செயல்பட்டு வருகின்றன. எம்.பி.க்களின் கடிதங்களுக்கு வேலை வழங்கிய காலமும், ஆர்ப்பாட்டங்களுக்கு பயந்து வேலை வழங்கிய காலமும் மாற்றப்பட வேண்டும். நாட்டின் முன்னேற்றத்திற்காக மிகவும் கடினமான மற்றும் பிரபல்யமற்ற முடிவுகளை எடுக்க வேண்டும்.“ என்று பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தெரிவித்தார்.

நன்றி - President's Media Division