‘கொழும்பு திறந்தவெளி வில்வித்தை சர்வதேசப் போட்டி’நிகழ்வில்
பாதுகாப்பு செயலாளர் பங்கேற்பு

ஜூலை 17, 2023
  • இலங்கை வில்வித்தை வீரர்கள் புதிய உலக சாதனையை படைத்துள்ளனர்

தியகம மகிந்த ராஜபக்ச மைதானத்தில் இன்று (16) இடம்பெற்ற கொழும்பு திறந்தவெளி வில்வித்தை சர்வதேச போட்டி நிகழ்வில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார்.

தியகம மைதானத்தில் நடைபெற்ற மேற்படி நிகழ்வில் பெருமளவிலான போட்டியாளர்கள் கலந்துகொண்டனர். இதன்போது போட்டியாளர்களிடையே கடுமையான போட்டி நிலவியது.

விளையாட்டு மைதானங்களில் நிரம்பி வழியும் தீவிர கிரிக்கெட் ரசிகர்களையும், உலக அரங்கில் நமது தேசத்தை பெருமையுடன் பிரதிநிதித்துவப்படுத்திய விளையாட்டு வீரர்களையும் குறிப்பிட்டு உரையாற்றிய ஜெனரல் குணரத்ன "விளையாட்டுகளின் முக்கியத்துவத்தை நாம் எப்போதும் அங்கீகரித்துள்ளோம் " எனக் குறிப்பிட்டார்.

சிறந்த பண்புகளை உருவாக்குதல், மதிப்புமிக்க வாழ்க்கைப் பாடங்களைக் கற்றுக்கொள்லுதல் மற்றும் தேசிய பெருமையை வளர்த்தல் ஆகியவற்றினை விளையாட்டுகளின் மூலம் நாம் பெற்றுக்கொள்வதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.

பாதுகாப்புச் செயலாளர் அனைத்து பங்கேற்பாளர்களின் அர்ப்பணிப்பு, திறமை மற்றும் விளையாட்டுத்திறன் ஆகியவற்றிற்காக தனது வாழ்த்துக்களைத் தெரிவித்தார்.

மேலும் உலக சாதனைக்காக முயற்சிக்கும் வில்வித்தை போட்டியாளர்கள் உட்பட அனைத்து விருது பெற்றவர்களையும் பாராட்டினார்.

இலங்கையில் வில்வித்தையை ஒரு விளையாட்டாக மேம்படுத்துவதில் முக்கிய பங்காற்றிய கெப்டன் இந்திரநாத் பெரேராவின் மகத்தான பங்களிப்பையும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.

இலங்கையைச் சேர்ந்த 128 வில்வித்தை வீரர்கள் ஒரு மணி நேரம் நாற்பது நிமிடங்களில் 30,000 அம்புகளை எய்து புதிய உலக சாதனையை படைத்தது அன்றைய நிகழ்வுகளின் சிறப்பம்சமாகும்.

இந்நிகழ்வில், தியகம விளையாட்டு மைதானத்தின் பணிப்பாளர் நாயகம், மேஜர் ஜெனரல் லால் சந்திரசிறி, இராணுவக் கப்டன் (ஓய்வு) இந்திரநாத் பெரேரா, வில்வித்தை ஏற்பாட்டுக் குழு மற்றும் விளையாட்டுப் பங்கேற்பாளர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.