--> -->

ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டிகளில் இலங்கை
இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் சாதனை

ஜூலை 17, 2023

தாய்லாந்தின் பேங்கொக்கில் நடைபெற்ற ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் - 2023 போட்டியில் பங்கேற்ற இலங்கை இராணுவம் மற்றும் கடற்படை வீரர்கள் தங்கம், வெள்ளி மற்றும் வெண்கலப் பதக்கங்கள் உட்பட பல பதக்கங்களை வென்றுள்ளனர்.

இராணுவத்தின் அஞ்சலோட்ட வீரர்கள் 400 × 4 ஆண்களுக்கான அஞ்சலோட்ட போட்டியில் கலந்து கொண்டு புதிய ஆசிய அஞ்சலோட்ட சாம்பியன்ஷிப் சாதனையையும் இலங்கை சாதனையையும் பதிவுசெய்துள்ளனர்.

ஆண்களுக்கான அஞ்சலோட்ட அணியில் இராணுவத்தின் சார்ஜென்ட் எச்கேகே குமாரகே, பொம்பார்டியர் எஸ்ஏ தர்ஷன, லான்ஸ் கோப்ரல் ஆர்எம்ஆர்என் ராஜகருணா மற்றும் கன்னர் ஜிடிகேகே நிகு ஆகியோர் பங்குபற்றியதாக இராணுவ வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஆசிய மெய்வல்லுனர் சாம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 × 4 அஞ்சலோட்ட அணியில் பங்குபற்றிய இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் என். ரத்நாயக்க வெள்ளிப் பதக்கத்தைப் பெற்றுக்கொண்டார்.

மகளிருக்கான 400 மீற்றர் ஓட்டப்போட்டியில் இலங்கை இராணுவ மகளிர் படையணியின் கோப்ரல் என் ராமநாயக்க தங்கப் பதக்கத்தை வென்றார்.

அதேபோன்று இலங்கை இராணுவ மகளிர் படையணியைச் சேர்ந்த கோப்ரல் எச்எல்என்டி லேகம்கே, மகளிருக்கான ஈட்டி எறிதல் போட்டியில் 60.93 மீற்றர் ஈட்டி எறிந்து புதிய இலங்கை சாதனையை நிலைநிறுத்தி வெண்கலப் பதக்கத்தையும் வென்ருள்ளார்.

இதேவேளை, மகளிருக்கான 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் இலங்கை கடற்படையின் பெண் சிறு அதிகாரி கயந்திகா அபேரத்ன வெண்கலப் பதக்கத்தை வென்றுள்ளார். பெண்களுக்கான 400x4 அஞ்சலோட்டப் போட்டியில் பெண் சாதாரண கடற்படை சிப்பாய் சயுரி மெண்டிஸ் வெள்ளிப் பதக்கத்தையும் வென்றுள்ளார் என கடற்படை ஊடக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.