நோய்வாய்ப்பட்ட மீனவரை கரைக்கு அழைத்து வந்த இலங்கை கடற்படை படகு

ஆகஸ்ட் 03, 2023

பல நாள் மீன்பிடி படகொன்றில் சுகவீனமுற்றிருந்த உள்ளூர் மீனவர் ஒருவர் இலங்கை கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டார். கடற்படை ஊடக தகவல்களுக்கமைய, குறித்த மீனவர் ஞாயிற்றுக்கிழமை (ஜூலை 30) கலமெட்டிய மீன்பிடித் துறைமுகத்திலிருந்து 'வர்ஷன் புத்தா   03' (பதிவு எண். IMUL-A-0872 MTR) என்ற பல நாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்றுள்ளார்.

அம்மீனவர் கடலில் வைத்து பலத்த சுகவீனமுற்றதையடுத்து, கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் கொழும்பில் உள்ள கடல்சார் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்திற்கு (MRCC) வழங்கிய தகவலுக்கமைய  கடற்படை அதன் தெற்கு கடற்படை கட்டளையில் இருந்து P 475 என்ற விரைவுத் தாக்குதல் படகை நோயாளியை கரைக்கு கொண்டுவர அனுப்பியுள்ளது.

அம்பாந்தோட்டைக்கு தென்கிழக்கே சுமார் 20 கடல் மைல் (சுமார் 37கிமீ) தொலைவில் தரித்திருந்த மீன்பிடி படகிலிருந்த நோயாளியை ஏற்றிக்கொண்டு கடற்படை படகு திங்கட்கிழமை (ஆகஸ்ட் 01) அம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடைந்தது. பின்னர் அந்நோயாளி  சிகிச்சைக்காக ஹம்பாந்தோட்டை மாவட்ட பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.