இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு ரூ.2.76 மில்லியன் பெறுமதியிலான கல்வி புலமைப்பரிசில்கள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் வழங்கி வைப்பு

ஆகஸ்ட் 15, 2023

க.பொ.த. (சாதாரண தரம்) பரிட்சையில் சித்தி பெற்ற இராணுவ வீரர்களின் குடும்பங்களைச் சேர்ந்த 23 மாணவர்களுக்கான ரூ. 2.76 மில்லியன் பெறுமதியான புலமைப்பரிசில் உதவித்தொகைகள் ரணவிரு சேவா அதிகாரசபையினால் இன்று (ஆகஸ்ட் 15) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த நிகழ்வு ரணவிரு சேவா அதிகாரசபையின் தலைவர் மேஜர் ஜெனரல் நந்தன சேனாதீர (ஓய்வு) அவர்களின் தலைமையில் இடம்பெற்றது.

இராணுவ வீரர்களின் பிள்ளைகளுக்கு கல்வி நிவாரணம் வழங்கும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த புலமைப்பரிசில் வழங்கும் நிகழ்வுக்கு லாலி கொப்பேகடுவ, மானெல் விமலரத்ன, அப்சரா குணவர்தன மற்றும் ரேகா சேனாதீர ஆகியோர் கலந்து கொண்டனர்.

பிரியந்த முனசிங்க தலைமையிலான இத்தாலியை தளமாகக் கொண்ட இலங்கை நன்கொடையாளர்கள் இந்த திட்டத்திற்கு நிதி உதவி வழங்கினர்.

இதற்கமைய, ஒரு இராணுவ வீரரின் பிள்ளைக்கு மாதம் ரூ. 5,000 பிரகாரம் இரண்டு ஆண்டுகளுக்கு (மொத்தம் ரூ. 120,000.00) வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

இலங்கை கடற்படையின் பிரதம அதிகாரி ரியர் அட்மிரல் ஜயந்த குலரத்ன, விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்ரமரத்ன, ரணவிரு சேவா அதிகாரசபையின் பிரதித் தலைவர் திருமதி. சோனியா கோட்டேகொட, ரணவிரு சேவா அதிகாரசபையின் பணிப்பாளர் பிரிகேடியர் சந்திரா அபேகோன், ரணவிரு சேவா அதிகாரசபைத் தலைவரின் செயலாளர் பிரிகேடியர் நளின் மெதிவக, ரணவிரு சேவா அதிகாரசபையின் ஊழியர்கள், நன்கொடையாளர்கள் மற்றும் பெற்றோர்கள் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.