முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான நிரந்தர அலுவலகக் கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டி வைப்பு

ஆகஸ்ட் 17, 2023
  • பாதுகாப்பு தலைமையக வளாகத்தை அண்டிய காணியில் இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்திற்கான புதிய கட்டிடத்திற்கு பாதுகாப்பு செயலாளர் அடிக்கல் நாட்டினார்

இலங்கை முன்னாள் படைவீரர் சங்கத்தின் (SLESA) நீண்டகால தேவையை நிறைவேற்றும் வகையில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன இன்று (ஆகஸ்ட் 17) கோட்டே ஸ்ரீ ஜயவர்தனபுரவில் ஒதுக்கப்பட்ட காணியில் முன்னாள் படைவீரர் சங்கத்தின் உத்தேச கட்டிடத்திற்கு அடிக்கல் நாட்டினார்.

இந்நிகழ்வில் கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளரை முன்னாள் படைவீரர் சங்க தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா (ஓய்வு) வரவேற்றார்.

முன்னாள் படைவீரர் சங்கத்தின் புதிய அலுவலகத்திற்கான காணியை தேர்ந்து எடுப்பதில் பிரதான பங்குவகித்தவர் ஜெனரல் குணரத்ன என்பது குறிப்பிடத்தக்கது.

மகாசங்கத்தினரின் சமய அனுஷ்டானங்கள் மற்றும் ஆசீர்வாதங்களுக்கு மத்தியில் அடிக்கல் நாட்டப்பட்டது.

முன்னாள் படைவீரர் சங்கத்தின் 78வது ஆண்டு விழாவின் போது பாதுகாப்பு செயலாளரால் வழங்கப்பட்ட உறுதிமொழிக்கு அமைவாகவே இந்த திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

266 பேர்ச்சஸ் நிலப்பரப்பில், 10,032 சதுர அடி மொத்தப் பரப்பளவு கொண்ட இந்த இரண்டு மாடிக் கட்டிடத் தொகுதிக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு சுபவேளையில் இடம்பெற்றது.

மேற்படி கட்டடமானது ரூ. 60 மில்லியன் மதிப்பீட்டில் கட்டப்படவுள்ளதுடன் இதற்கான கட்டுமானப் பணிகள் முப்படையினரால் மேற்கொள்ளப்படவுள்ளது.

இந்நிகழ்வில், பாதுகாப்புப் படைகளின் பிரதம அதிகாரி ஜெனரல் சவேந்திர சில்வா, இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகே, கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, விமானப்படையின் பிரதம அதிகாரி எயார் வைஸ் மார்ஷல் சம்பத் விக்கிரமரத்ன, முன்னாள் படைவீரர் சங்க செயலாளர் நாயகம் லெப்டினன்ட் கேர்ணல் அஜித் சியம்பலாபிட்டிய (ஓய்வு) மற்றும் முன்னாள் படைவீரர் சங்க உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.