6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான அதிநவீன இராணுவ தொடர்பாடல் வாகனங்கள் இலங்கை இராணுவத்திற்கு உத்தியோகபூர்வமாக கையளிப்பு

ஆகஸ்ட் 22, 2023

இராணுவ நோக்கங்களுக்காக சீன தேசிய பாதுகாப்பு அமைச்சிடம் இருந்து வழங்கப்பட்ட 6.2 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 'அவசர கட்டளை மற்றும் அதிநவீன தொடர்பாடல் முறைமை வாகனத் தொகுதி' (11 வாகனங்கள்) பதில் பாதுகாப்பு அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது.

சீன தேசிய பாதுகாப்பு அமைச்சின் அதிநவீன தகவல் தொடர்பு சாதனங்களைக் கொண்டு வடிவமைக்கப்பட்ட வாகனங்கள் இராணுவ தலைமையக வளாகத்தில் இன்று (ஆகஸ்ட் 22) ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிகழ்வின் போது கையளிக்கப்பட்டது.

இராணுவத்திலிருந்து இராணுவத்திற்கு நன்கொடை திட்டத்தின் மூலம் இலங்கையிலுள்ள சீனத் தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சோவ் போவிடமிருந்து பெற்றுக்கொண்டதைத் தொடர்ந்து, பதில் பாதுகாப்பு அமைச்சர் தென்னகோன் அதனை பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவிடம் கையளித்தார்.

அதனைத் தொடர்ந்து பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் விக்கும் லியனகேவிடம் சாவிகளை அடையாளமாக வழங்கினார்.

அதனைத் தொடர்ந்து இலங்கை பாதுகாப்பு உயர் அதிகாரிகள் சீன தூதரக அதிகாரிகளுடன் இணைந்து வாகனங்களை பார்வையிட்டதுடன், இலங்கை இராணுவத்தின் பிரதான சமிக்ஞை அதிகாரி மேஜர் ஜெனரல் சுகத் ரத்நாயக்க மற்றும் சீன பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சோவ் போ ஆகியோர் இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

எதிர்காலத்தில் உள்ளக பாதுகாப்பு மற்றும் விசேட கடமைகள் ஆகிய இரண்டிற்கும் அதி நவீன இராணுவ வாகனங்களை இலங்கை இராணுவம் பயன்படுத்த உத்தேசித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இந்த நிகழ்வினை நினைவுகூரும் வகையிலும் நல்லெண்ணத்தின் அடையாளமாகவும் இலங்கை இராணுவத்தின் சார்பாக பதில் பாதுகாப்பு அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களினால் சீன பாதுகாப்பு ஆலோசகர் சிரேஷ்ட கேர்ணல் சோவ் போ அவர்களுக்கு நினைவுச் சின்னம் ஒன்றும் வழங்கப்பட்டது.

இலங்கை பாதுகாப்பு அமைச்சின் மேலதிக செயலாளர்கள் உள்ளடங்களாக சிரேஷ்ட அதிகாரிகள்,இலங்கை இராணுவத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் மற்றும் இலங்கைக்கான சீன தூதரகத்தின் உதவி பாதுகாப்பு ஆலோசகர் உட்பட முக்கியஸ்தர்கள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.