அதிகரித்து வரும் காட்டுத் தீ குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கவனம் செலுத்தினார்

ஆகஸ்ட் 23, 2023
  • நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் ஏற்படும் காட்டுத் தீயைக் கட்டுப்படுத்துவதற்காக பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் தலைமையில் விஷேட கலந்துரையாடல்

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலை மற்றும் காட்டுத் தீ அதிகரிப்பு குறித்து பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் கௌரவ பிரமித்த பண்டார தென்னகோன் அவர்களின் தலைமையில் விஷேட கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றது.

அமைச்சரின் அலுவலகத்தில் நேற்று (ஆகஸ்ட் 22) இடம்பெற்ற இந்த கலந்துரையாடலின் போது முப்படை, பொலிஸ், தீயணைப்பு மற்றும் வன பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் மற்றும் சம்பந்தப்பட்ட ஏனைய தரப்பினரின் கவனத்திற்கு இந்த விடயத்தை கொண்டுவந்த இராஜாங்க அமைச்சர், காட்டுத் தீயினைத் தடுப்பதற்காக எடுக்கக்கூடிய நடவடிக்கைகள் குறித்தும் அவர்களுடன் கலந்துரையாடினார்.

மேலும், இவ்வாறான வறட்சியான காலங்களில் இத்தகைய தீ திட்டமிடப்பட்ட மனித நடவடிக்கைகளினால் அல்லது கவனக்குறைவினால் அதிகரித்துள்ளதாகவும் காட்டுப்பிரதேசங்களில் முகாமிட்டு தங்கும் குழுக்களினால் இவ்வாறான செயற்பாடுகள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் காணப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார். எனவே இவ்வாறான வன அழிவை தடுக்க முன் கூட்டியே மேற்கொள்ளக்கூடிய நடவடிக்கைகள் தொடர்பில் அனைவரும் அதிக கவனம் செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் கேட்டுக்கொண்டார்.

பாதுகாப்பு அமைச்சின் சிரேஷ்ட உதவிச் செயலாளர் (பாதுகாப்பு) ஹர்ஷ விதானாரச்சி, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் மேஜர் ஜெனரல் சுதந்த ரணசிங்க, கடற்படையின் காலாட்படை பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் பி.ஏ.ஜே.என். பொன்னம்பெரும, வன பாதுகாப்பு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கே.எம்.ஏ. பண்டார, வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் பிரதிப் பணிப்பாளர் நாயகம் சூரிய பண்டார, பிரதான தீயணைப்பு அதிகாரி பி.டி.கே.ஏ. வில்சன், சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் மேலதிக பணிப்பாளர் நாயகம் ரியர் அட்மிரல் டபிள்யூ.டி.எம். சுதர்சன, இராணுவத்தின் நடவடிக்கை பணிப்பாளர் மேஜர் ஜெனரல் நஜிவ எதிரிசிங்க, விமானப்படை அதிகாரி விங் கொமாண்டர் பசன் தயானந்த, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் டி.டி.டி. ஹெட்டியாராச்சி, நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சின் பிரதிநிதி எச்.கே.எஸ்.எஸ் குணசேகர உட்பட முப்படை அதிகாரிகள் மற்றும் பொலிஸாரும் இந்த கலந்துரையாடலில் கலந்துகொண்டனர்.

காட்டுத் தீ அதிகரிப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடர்பிலான கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த இராஜாங்க அமைச்சர் தென்னகோன், தற்போது நிலவும் வறட்சியான காலநிலை காரணமாக வன பாதுகாப்பு மற்றும் தோட்டப்பகுதிகளில் அதிகளவான தீப்பரவல் சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகவும், அதனை ஒப்பிடுகையில் கடந்த ஆண்டு 78 காட்டுத் தீ ஏற்பட்ட நிலையில், இந்த ஆண்டு ஏற்கனவே 123 காட்டுத் தீ சம்பவங்கள் பதிவாகியுள்ளன எனத் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் வறட்சியான காலநிலையினால் ஏற்படும் காட்டுத் தீயை கட்டுப்படுத்துவதற்கு அனர்த்த முகாமைத்துவ நிலையம், முப்படையினர், தீயணைப்பு பிரிவினர், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்கள், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் வன பாதுகாப்பு திணைக்களம் ஆகியன கடந்த சில நாட்களாக பெரும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.

அனர்த்த முகாமைத்துவ நிலையம், வனவிலங்கு திணைக்களம், வன பாதுகாப்பு திணைக்களம், தோட்ட கைத்தொழில் மற்றும் துறைமுக அதிகாரசபை ஆகியவற்றிற்கு பல கண்காணிப்பு நடவடிக்கைகளை வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும், மேலும் வன பாதுகாப்பு திணைக்களத்திற்கும் இது தொடர்பில் விசேட கோரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார். வனஜீவராசிகள் திணைக்களம் குறிப்பாக அதிக உணர்திறன் நிறைந்த பிரதேசங்களில் இந்த நிலைமையை கட்டுப்படுத்துவது மற்றும் இதற்கு எவ்வாறு ஒத்துழைப்பு வழங்குவது என்பது குறித்து அனர்த்த முகாமைத்துவ நிலையம் மற்றும் பாதுகாப்பு அமைச்சு கலந்துரையாடியுள்ளது.

இதற்கமைவாக, எதிர்வரும் சில தினங்களில் தீயணைப்பு தடுப்பு வலயங்களை உருவாக்கும் விசேட வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தவுள்ளோம் எனவும், தீயணைப்புப் பிரிவினரால் பாதுகாப்பு படை மற்றும் சிவில் பாதுகாப்பு படை பணியாளர்களுக்கு பயிற்சியளிக்கும் விசேட வேலைத்திட்டம் ஒன்றையும் ஆரம்பிக்க நடவடிக்கை எடுத்துள்ளதாகவும் இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.

பெருந்தோட்டத் துறையில் காட்டுத் தீ ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ள நிலையில், காட்டுத் தீயை தடுப்பதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்க தனியார் மற்றும் அரச தோட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்துமாறு பெருந்தோட்ட அமைச்சர் மற்றும் அமைச்சின் செயலாளருக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் தென்னகோன் ஊடகங்களுக்கு மேலும் தெரிவித்தார்.

மேலும் பாதிப்புக்கள் ஏற்படும் பகுதிகளுக்கு மக்கள் செல்வதைத் தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு வனஜீவராசிகள் அமைச்சரிடம் விசேட கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதுபோன்ற செயல்களால் மழை வரும் என்ற மூடநம்பிக்கையின் காரணமாக சில கிராமவாசிகள் காடுகளுக்கு தீ வைப்பதை அவதானிக்க முடிவதாக கூறிய இராஜாங்க அமைச்சர், இவ்வாறான அழிவுச் செயல்களில் இருந்து மக்களைத் தவிர்ந்து கொள்ளுமாறு கேட்டுக்கொண்டார்.

வேட்டையாடுதல், சேனை விவசாயம் மற்றும் பொழுதுபோக்கிற்காக காடுகளுக்குள் நுழையும் இளைஞர்கள், மலைப் பகுதிகளுக்கு செல்பவர்கள் மற்றும் முகாமிட்டு தங்குபவர்களின் செயல்களும் காட்டுத்தீ அதிகரிப்புக்கு காரணமாக அமைகிறது எனவும் இராஜங்க அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

இவ்வாறான தீங்கு விளைவிக்கும் செயல்களில் ஈடுபடுவதைத் தவிர்ந்து கொள்ளுமாறு அனைத்து மக்களையும் கேட்டுக்கொண்ட இராஜாங்க அமைச்சர் தென்னக்கோன், காட்டுத் தீயை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு தற்போதுள்ள சட்ட கட்டமைப்பிற்குள் தண்டனை வழங்குமாறு வன பாதுகாப்பு திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் மற்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுப்பதாகவும் இராஜங்க அமைச்சர் தெரிவித்தார்.