ஓய்வு பெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்த ‘மாஸ்டர் மைண்ட்ஸ் - 2023’ போட்டி நிகழ்வின் வெற்றியாளர்களுக்கு பாதுகாப்பு செயலாளரினால் விருதுகள் வழங்கிவைப்பு

ஆகஸ்ட் 27, 2023
  • "உண்மையான வெற்றி அறிவைப் பின்தொடர்வதில் உள்ளது" - பாதுகாப்புச் செயலாளர்

இலங்கை ஓய்வு பெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்கம் ஏற்பாடு செய்த 'மாஸ்டர் மைண்ட்ஸ் - 2023' போட்டி நிகழ்வு பொரலஸ்கமுவ, கோல்டன் ரோஸ் ஹோட்டலில் சனிக்கிழமை (ஆகஸ்ட் 26) இடம்பெற்றது.                            
இந்த நிகழ்வில் பிரதம அதிதியாகக் கலந்துகொள்ள வருகை தந்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரத்னவை ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகள் சங்கத்தின் தற்போதைய தலைவர் எயார் சீப் மார்ஷல் ககன் புலத்சிங்கள (ஓய்வு) வரவேற்றார்.

பல கட்டங்களாக நடத்தப்பட்ட இந்த மாஸ்டர் மைண்ட்ஸ் போட்டி நிகழ்வில் முப்படை அதிகாரிகள் (3 உறுப்பினர்கள்) அடங்கிய 86 அணிகள் போட்டியிட்டன.

இந்நிகழ்வில் உரையாறிய ஜெனரல் குணரத்ன, இந்த ஆண்டுக்கான போட்டியானது இராணுவத்தின் மத்திய முகாமையாளர் பிரிவை மையமாகக் கொண்டது என்றும் "உண்மையான வெற்றியானது அறிவைப் பின்தொடர்வதிலும் அதனை நாம் கட்டியெழுப்பும் பிணைப்பிலும் உள்ளது" எனத் தெரிவித்தார்.

அங்கு மேலும் கருத்து தெரிவித்த பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் குணரத்ன அவர்கள்,"இவ்வாறான கேள்விகளை தங்களது அறிவினை மதிப்பீடு செய்வதற்கு மட்டும் எதிற்பாக்காமல் இதன் மூலம் கற்றுக் கொள்ளவும் ஒன்றாக இணைந்து உயர்வடையவும் ஒரு வாய்ப்பாக முன்னெடுத்து செல்ல நான் உங்களை ஊக்குவிக்கிறேன்" எனத் தெரிவித்தார்.

இராணுவ விவகாரங்கள், சமூகப் பிரச்சினைகள், தற்போதைய உலகளாவிய விடயங்கள் மற்றும் வாசிப்புப் பழக்கம் ஆகியவற்றில் பொது அறிவை மேம்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட இந்த போட்டி நிகழ்வில், இராணுவத்தைச் சேர்ந்த 60 அணிகளும், கடற்படையைச் சேர்ந்த 20 அணிகளும், விமானப் படையை பிரதிநிதித்துவப்படுத்தி 05 அணிகளும், கொத்தலாவல பல்கலைக்கழகத்தின் ஒரு அணியும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

இந்த போட்டி நிகழ்வினை தொடர்ந்து, ஜெனரல் குணரத்ன வெற்றியாளர்களுக்கு பதக்கங்கள், வெற்றிக் கிண்ணங்கள் மற்றும் பணப் பரிசுகளை வழங்கினார்.

இதற்கமைவாக, கஜபா படைப்பிரிவின் ரெஜிமென்ட் தலைமையகக் குழு அதிகூடிய புள்ளிகளைப் பெற்று 100,000.00 ரூபா பெறுமதியான சம்பியன்ஸ் ரொக்கப் பரிசை வென்றதுடன், தென்கிழக்கு கடற்படைக் கட்டளையைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கடற்படை அணி இரண்டாம் இடத்தையும் இராணுவத்தின் சமிக்ஞைப் படை அணி மூன்றாவது இடத்திற்கும் தெரிவு செய்யப்பட்டு முறையே 60,000.00 ரூபா மற்றும் 40,000.00 ரூபா இவர்களுக்கான பரிசுத் தொகையாக வழங்கப்பட்டன.

ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்கம் 1996ஆம் ஆண்டு முதல் இலங்கையில் மூத்த ஓய்வுபெற்ற இராணுவ அதிகாரிகளின் அமைப்பாக இயங்கி வருகிறது குறிப்பிடத்தக்கது.

இலங்கை முப்படைகளில் உயர் பதவிகளை வகித்த கொடி நிலை அதிகாரிகள், இராணுவ விவகாரங்களில் அனுபவமும் நிபுணத்துவமும் கொண்டவர்களாகவும், எதிர்கால சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இராணுவ தலைமுறையை சீர்படுத்துவதில் பெரும் மதிப்பு மிக்கவர்களாக இருப்பார்கள் என்பதில் சந்தேகமில்லை.

இந்நிகழ்வில், இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பிரியந்த பெரேரா, ஓய்வுபெற்ற கொடி நிலை அதிகாரிகளின் சங்க செயற்குழு உறுப்பினர்கள், ‘மாஸ்டர் மைண்ட்ஸ் - 2023’ போட்டி நிகழ்வின் ஏற்பாட்டுக் குழு தலைவர் மேஜர் ஜெனரல் உபுல் பெரேரா, ஏற்பாட்டுக் குழு உறுப்பினர்கள் மற்றும் சிரேஷ்ட இராணுவ அதிகாரிகளும் கலந்துகொண்டனர்.