இலங்கை விமானப்படையின் இலக்கம் 2 போக்குவரத்து விமானப் படை தனது 66வது ஆண்டு நிறைவைக் கொண்டாடுகிறது

செப்டம்பர் 06, 2023

2023 ஆம் ஆண்டு செப்டெம்பர் 01ஆம் திகதி இலங்கை விமானப்படைக்கு தனித்துவமான பணியைச் செய்யும் இலக்கம் 2 கனரக போக்குவரத்துப் படைப்பிரிவின் 66வது ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது. இந்த படைப்பிரிவு 1957ஆம் ஆண்டு செப்டெம்பர் 1ஆம் திகதி இலங்கை விமானப்படை கட்டுநாயக்கவில் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

கடந்த 66 வருடங்களில் இலங்கை விமானப்படையில் பயன்படுத்தப்பட்ட 17 பல்வேறு வகையான விமானங்கள் இந்த படைப்பிரிவுடன் இணைக்கப்பட்டுள்ளன. எயார் ஸ்பீட் ஒக்ஸ்போர்ட் விமானத்துடன் தொடங்கிய விமானக் குழுவில் தற்போது அன்டோனோவ் 32பி மற்றும் ஹெர்குலஸ் சி-130 ஆகிய விமானங்கள் உள்ளடங்கியுள்ளது.

திட்டமிடப்பட்ட விமான சேவைகள், விபத்து மற்றும் மருத்துவ விமான சேவைகள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண (HADR) செயல்பாடுகள், உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் கண்காணிப்பு மற்றும் உளவு விமானங்கள், பாராசூட் பயிற்சி மற்றும் முக்கிய பிரமுகர்கள் போக்குவரத்து, வெளிநாட்டு விமானங்கள் உள்ளிட்ட விமானப் போக்குவரத்துச் செயல்பாடுகள் இப் படைப்பிரிவின் முக்கியப் பணிகளில் அடங்கும் என விமானப்படை வட்டாரங்கள் தெரிவித்தன.

1991 முதல் 2009 வரையிலான சுமார் இரண்டு தசாப்தங்களாக, ஈழப் போரின் காரணமாக யாழ் குடாநாட்டை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும் தரை மற்றும் கடல் வழிகள் தடைப்பட்டிருந்தபோது, எதிரிகளின் ஏவுகணை அச்சுறுத்தலையும் பொருட்படுத்தாமல் இந்த படைப்பிரிவு சிறப்பான போக்குவரத்துப் பணிகளை மேற்கொண்டதாக விமானப்படை வட்டாரங்கள் மேலும் தெரிவித்தன.

விமானப்படை தளபதி எயார் மார்ஷல் உதேனி ராஜபக்ஷ 2010 ஜனவரி 01 முதல் 2011 மார்ச் 28 வரையிலான காலப்பகுதியில் கட்டளை அதிகாரியாக பணியாற்றினார், தற்போது விங் கொமாண்டர் முடித சமரகோன் 2வது படைப்பிரிவுக்கு பதில் கட்டளை அதிகாரியாக கடமையாற்றுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் அதிமேதகு ஜனாதிபதியின் வர்ணங்கள் இலக்கம் 2 அணிக்கு 2009ஆம் ஆண்டு வழங்கப்பட்டது.